திருவண்ணாமலை: பாஜகவை விமர்சிக்காமலேயே பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம். இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும், என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த மார்ச் 22-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் இருந்தே நாம் தேர்தல் பணிகளை நாம் தொடங்கிவிட்டோம். தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். இதோடு நான்கு வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது.
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். தன்னுடைய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும். அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ‘பச்சைப் பொய்யர்’ பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். யாரு? பொய்ச்சாமி, மன்னிக்கவும் பழனிசாமி பேசுகிறார்.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியை அன்போடு பணிவோடு கேட்கிறேன், விடியல் பயணம் – பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம்? புதுமை பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா?லட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ’நான் முதல்வன் திட்டம்’ அதிமுக திட்டமா? நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி - இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா?
2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இது அதிமுக திட்டமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? இது பாஜகவின் பழனிசாமி அவரின் ஆட்சியில் நடந்ததா?மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் பரப்புரைக் கழகம் நடத்தி வருகிறோமே! இந்த திட்டம் எல்லாம் பழனிசாமியின் கனவிலாவது வந்திருக்குமா? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோருக்கான விழாக்களை நம்மை திராவிட மாடல் அரசு நடத்துகிறதே, இவர்களின் கொள்கைகளாவது என்ன என்று கம்பராமாயணம் படித்த பழனிசாமி சொல்வாரா?
வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு போராடிய இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு மணிமண்டம் அமைத்து வருகிறோமே, இது அதிமுக ஆட்சியில் போட்ட திட்டமா? ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் கண்டுகொண்டாரா? அரசு ஊழியராக இருக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக்கியது நம்முடைய திமுக ஆட்சி.ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி, தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல, அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். உண்மையில், அவரின் ஆட்சியில் தமிழக நலன்களும் உரிமைகளும் பாஜகவிடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது. இதுதான் வரலாறு.
திமுக குடும்பக் கட்சியாம். ஆமாம், குடும்பக் கட்சிதான்! அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், திமுக குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை வாழவைக்கும் கட்சி, திமுக அண்ணா, கருணாநிதி காட்டிய பாதையில், ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கிய கட்சி, திமுக.பச்சைப் பொய் பழனிசாமி, சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து,உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார். பாஜக கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த திமுகவினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார், பாஜகவுக்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்” என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, ‘கூட்டணி தர்மம்’ என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள், "மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார்?" பாஜகவை விமர்சிக்காமலேயே பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம். இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் என்ற போர்க்களம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது நாம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப் போகும் வெற்றிதான், எதிர்கால இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
100 ஆண்டு காலமாக சமூகநீதியின் மூலமாக தமிழகம் பல்வேறு முன்னேற்றங்களை அடையத் தொடங்கியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திமுக ஆட்சி எத்தனையோ முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. தொடர்ந்து இப்போது இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் கோட்பாடானது, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால், உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும்.
மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்துக்கு இந்தத் திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும். நிறைவாக, தீபம் தெரிவதைப் போல, இந்தியாவுக்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க, இண்டியா கூட்டணி வெல்க, நாற்பதும் நமதே! நாடும் நமதே!" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago