வாச்சாத்தியில் சட்ட விழிப்புணர்வு முகாம்:  நீதிபதி வைத்தியநாதன் பங்கேற்பு

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்துக்குட்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (அக்.22) நடந்தது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு மற்றும் தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மணி மொழி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் நசீர் அகமது, மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முகாமுக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு சட்டசேவைகள் மையத்தின் செயல் தலைவரும், மூத்த நீதிபதியுமான எஸ். வைத்தியநாதன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் , தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு சட்ட உதவிகள் ஏதும் தேவைபடின் அதற்கு உதவி செய்வதற்காகதான் வந்துள்ளேன்.

தமிழ்நாடு சட்ட உதவி மையத்தின் முதல் குறிக்கோள் வசதியற்றப் பிரிவினருக்கு நேர்மையான, அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே ஆகும். அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். இலவச சட்ட உதவித் தேவைப்படும் ஒருவர் சட்டப்பணிகள் ஆணையத்தின் குழுவை எழுத்து மூலம் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்யப்படும். எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு சட்ட ஆணையமே வழிமுறைகளை தெரிவிக்கும்.நேரடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இலவசமாக உதவி செய்யப்படும்.

சட்ட உதவிகள் மட்டுமின்றி அரசாங்கத்தின் மற்ற உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலூகா அளவிலும் இலவச சட்ட மையம் செயல்படுகின்றது. அங்கு சென்று பிரச்சனைகளை கூறினால் அதற்கான தீர்வை அங்குள்ளவர்கள் கூறுவார்கள். மக்கள் அதனை பயன்படுத்தி சட்டப்பிரச்சனைகளை தீரத்தகொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து முகாமின் முடிவில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சார்பில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க முன்னாள் தலைவர் பி.சண்முகம், தலைவர் டில்லி பாபு சார்பில் 130 மனுக்கள் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸடீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியர் வில்சன்ராசசேகர், மற்றும் நீதிபதிகள் , வழக்கறிஞர்கள், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். இறுதியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் ராஜா நன்றி கூறினார் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE