இண்டியா கூட்டணி இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி - முதல்வர் ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

இந்தியாவை இண்டியா கூட்டணி மீட்கும். இண்டியா கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம்பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இண்டியா கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம் என்று முதல்வர். மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் இந்தியாவின் பெரிய, வலிமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், மொழி, மதம், சில திட்டங்கள் என எப்போதும் வடக்குடன் உரசலில் இருந்து வருவதாகத் தோன்றுவதன் காரணம் என்ன?

தமிழகம் வலிமை மிகுந்த மாநிலம் என்பது உண்மை. நாங்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத் தத்துவத்தை கொண்டவர்கள். எங்கள் தாய்மொழி தமிழ், இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதியைப் பெற்றது. தமிழகத்தில் தமிழைத் தாழ்த்தி, இந்தியைத் திணிக்க முயன்றால், அதனை எப்போதும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதே நேரத்தில், வடமாநிலங்களும், அவரவர் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

உங்கள் கட்சி இந்தி மொழிக்கு எதிரானதா?

நாங்கள் இந்தி என்கிற மொழிக்கோ வேறு எந்தவொரு மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. எங்கள் கட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணா, இதனை 1962-லேயே நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கியிருக்கிறார். இந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்று வங்காளம், மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளைக் காக்க நினைக்கும் மாநிலங்கள் அனைத்தும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியம். இங்கே அவரவர் தாய்மொழிதான் பண்பாட்டின் உயிர்நாடி.

அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, தமிழகத்தில் தமிழ் -ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கைக்கான சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்திவிட்டார் அண்ணா. மூன்றாவது மொழி என்கிற சுமை ஏற்றப்படாத காரணத்தால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக் குறியீடு உலகளாவிய குறியீடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை நிர்ணயித்துள்ள இலக்குகளைத் தமிழகம் ஏற்கெனவே கடந்து, இருமொழிக் கொள்கை வாயிலாக பல படிகள் முன்னேறியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கேற்ற தனித்துவமான கல்விக் கொள்கை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் கட்சி இண்டியா கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சியினர் உங்கள் தலைவர்களிடம் சனாதனம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்கள். இருந்தும் உங்கள் கட்சியினர் அப்படி நடந்து கொள்வதாகத் தெரியவில்லையே?

தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் திமுக. அதனால் இது பற்றி உரிய விளக்கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டுகோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, இண்டியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.

அண்மைக்காலங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவத்தை வேறு சொற்களில் விமர்சித்துள்ளனர். 2024 தேர்தலின் மையப்பொருளாக ’முற்பட்ட சாதிகள் எதிர் பிற்படுத்தப்பட்ட சாதிகள்’ என்பதை முன்னிறுத்த உங்கள் கூட்டணிக்கட்சியினர் முயல்வதாகக் கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

எந்த ஒரு சமுதாயத்தையும் இன்னொரு சமுதாயத்துக்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை நாங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக, வடமாநிலங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்த பல தலைவர்கள் அவரவர் மாநிலங்களுக்கான அரசியல் இயக்கத்தைத் தொடங்கினர்.

காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும், மாநிலங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியும் ஜனநாயகத் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024 தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளவிருக்கிறது.

பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு ஏற்ற வலிமையான தலைவராக உங்கள் இண்டியா கூட்டணியில் யாரைக் கூறுவீர்கள்?

இந்தியாவை இண்டியா கூட்டணி மீட்கும். இண்டியா என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கும் நிலையில்தான் பாஜக இருக்கிறது. பிறகெதற்கு யார் வலிமையான போட்டியாளர் என்ற கேள்வி. இண்டியா கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம்பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. அவர்கள், ஜனநாயக விரோத, மதவாத அரசியல் செய்யும் பாஜகவை விரட்டும் வலிமை கொண்டவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இண்டியா கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்