பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது - இபிஎஸ் சாடல்

By செய்திப்பிரிவு

சேலம்: "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. பாஜகவிலிருந்து அதிமுக விலகியது என்றவுடன், சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாயந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில், அவர் பேசியது: "கூட்டணி என்பது மாறுபடக்கூடியது. அது அவ்வப்போது தேர்தல் நேரத்தில் அமைப்பது. ஆனால், கொள்கை என்பது நிலையானது. அதிமுக நிலையான கொள்கை கொண்ட கட்சி.

அதிமுகவுக்கு மதம் கிடையாது. சாதி கிடையாது. ஆண் சாதி, பெண் சாதி என்ற இரண்டே சாதி மட்டும்தான் அதிமுகவில் இருக்கிறது. அதிமுகவினர் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உடன் சகோதரத்துவத்துடன் பழகுவார்கள். அனைத்து மதத்தையும் நேசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

இஸ்லாமியர்கள் என்றாலும் சரி, கிறிஸ்தவர்கள் என்றாலும் சரி, அவரவரது மதம் அவர்களுக்குப் புனிதமானது. அதில் யாரும் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் யாருக்கும் யாரும் அடிமை கிடையாது. அனைவருமே சுதந்திரமாக வாழக்கூடியவர்கள். அவரவரது மதங்களைப் பின்பற்றி வாழக்கூடியவர்கள். அப்படித்தான் காலங்காலமாக இந்தியா இருக்கிறது. அதைத் தொடர்ந்து அதிமுக பின்பற்றும் என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.

நான், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. இஸ்லாமியர்களின் உணர்வுகள் குறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, இப்போதுதான், இஸ்லாமியர்கள் மீது பாசம் வந்துவிட்டதாக முதல்வர் பேசினார். இல்லை, நான் எப்போதுமே சாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவன். அனைத்து மதத்தையும் நேசிக்கக்கூடியவன்.

எந்த சாதிக்கும் அதிமுக அடிமை கிடையாது. எந்த மதத்துக்கும் அதிமுக விரோதம் கிடையாது. அனைத்து சாதி, மதங்களையும் ஒரே பார்வையில்தான் பார்க்கும். அதிமுகவைப் பார்த்து அவ்வாறு கேட்பதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுகதான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வந்தார்.

இதனால், பாஜகவிலிருந்து அதிமுக விலகியது என்றவுடன், சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாயந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது. உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்மை செய்திருந்தால், அந்த மக்கள் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை. ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE