சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளைத் தொடங்க சிறப்புத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: முதல்வருக்கு விவசாய சங்கம் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கு உதவும் வகையில் சிறப்புத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் மாதம் முதல் சம்பா பயிரிடும் காலம் தொடங்குகிறது. சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். தற்போதைய சூழலில் மத்திய கால நெல் ரகங்களைதான் சாகுபடி செய்ய இயலும். இதற்கு வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை முழு அளவு ஆங்காங்கே நீர் இருப்பு நிலைகளில் சேமிக்க வேண்டும். மேட்டூர் அணையில் முழு அளவில் சேமிக்கப்படும் நீரை பிப்ரவரி மாதம் இறுதி வரை திறந்துவிடும் உத்திரவாதத்தையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய கால ரகங்களை பயிரிட்டு ஓரளவு பருவமழையில் இருந்து தப்பலாம். ஜனவரி இறுதியில் மேட்டூர் அணை மூடப்பட வேண்டும் என்ற நிலையையும் தவிர்க்கலாம்.

எனவே, தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆழ்குழாய் நீர் கிடைக்கும் இடங்களில் சமுதாய நெல் நாற்றாங்கால் அமைத்து தேவையான விவசாயிகளுக்கு வேளாண்துறை வழங்க வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் ஆயில் இன்ஜின் மூலம் விவசாயிகள் நீர் இறைத்துக் கொள்ளும் வகையில், ஆயில் இன்ஜின், டீசல் போன்ற உதவிகளை அரசு வழங்க வேண்டும். இடுபொருட்களுக்கான முதலீட்டு மானியத்தை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆறுகள் தோறும் வாய்க்கால்கள் மூலமாக உரிய அளவு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE