“திமுக கூட்டணியில் தொடர்கிறோம்; கூடுதலாக ஒரு சீட் கேட்போம்” - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர்

By செய்திப்பிரிவு

கடலூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். தமிழகத்தில் 52 மாவட்டங்களாக பிரித்து, நிர்வாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் டெல்லியில் அகில இந்திய கவுன்சில் நடைபெற உள்ளது. நாங்கள் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம்.

அதனுடைய ஒருங்கிணைப்பு குழுவில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் உறுப்பினராக உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் கொள்கை ரீதியில் இடம் பெற்றுள் ளோம். தொடர்ந்து தேர்தல் களம் கண்டு வருகிறோம். மக்களவைத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களையும், 9 மண்டலங்களாக பிரித்து நவம்பர் மாதத்தில் பயிலரங்குகள் நடத்தவுள்ளோம்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி, தாங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது அதைச் செய்யவில்லை. அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே நடத்த அறிக்கை போர் காரணமாக பிரிந்துள்ளனர்.

எங்களை பொறுத்தவரை பாஜக-வுக்கு மாறான கூட்டணி இண்டியா கூட்டணிதான். தமிழகத்தைப் பொறுத் தவரை திமுக கூட்டணி தான். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கடந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE