தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ திராவிட தலைவர்களே காரணம்: அமைச்சர் மெய்யநாதன்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ‘நாட்டிலேயே தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழ திராவிட தலைவர்கள்தான் காரணம்’ என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘ஏழைப் பங்காளர் கலைஞர்’ எனும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் ஆகியோர், முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாற்று சாதனைகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி மற்றும் மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர், வருவாய்த்துறை ஆணையர் வெங்கடாசலம்,

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி நடைபெற்றன. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்ய நாதன் பேசியதாவது: நாட்டில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு, திராவிட தலைவர்கள்தான் காரணம். தமிழகத்தில் 89 சதவீதத்தினர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். உயர் கல்வியில் 59.71 சதவீதம் பெற்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கருணாநிதி 1969-ல் முதியோர் உதவித் தொகை திட்டத்தை கொண்டுவந்து ரூ.20 வழங்கினார்.

இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை ரூ.1,200 ஆக உயர்த்தி, 34 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியோர்களுக்கு வழங்கி வருகிறார். 1989-ல் விவசாய உற்பத்தியை பெருக்கவும், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். அடுத்ததாக, ரூ.7,000 கோடியில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்.

இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழகத்துக்கு கருணாநிதி வழங்கியுள்ளார் என்றார். நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், நாஞ்சில் சம்பத், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்எல்ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜூலு பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE