“திமுகவின் நீட் கையெழுத்து இயக்க நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை” - டி.டி.வி.தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: “நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம் என்று திமுகவின் மற்றுமொரு நாடகத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை” என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியாகவும், தேர்தலுக்கு பின்பு வேறு மாதிரியாகவும் செயல்படும் இரட்டை வேட திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என திமுகவினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்டதை ஏற்கனவே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசின் இயலாமையை அறிந்து கொண்ட மக்களை திசை திருப்ப கையெழுத்து இயக்கம் என்ற சூட்சமத்தை முதலமைச்சர் கையில் எடுத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, 1974ஆம் ஆண்டில் கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததன் விளைவாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் இன்றுவரை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது. கடந்த 2010ஆம் ஆண்டு அதே காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் போதே எதிர்த்து குரல் எழுப்பியிருந்தால் இன்றைக்கு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே போயிருக்காது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பின் தற்போது அதன் நிலை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த மசோதாவின் நிலை குறித்து விளக்கவும் திமுக அரசு தயாராக இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மத்திய அரசுக்கு என்ன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறார்? நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக மார்தட்டிப் பேசும் முதலமைச்சரால் தமிழக மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது?

நீட் தேர்வை ரத்து செய்ய எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், உரிய பயிற்சிகளையும் வழங்காமல், தேர்வு நடைபெறும் நாள் வரை மாணவர்களைக் குழப்பத்தில் வைத்திருக்கும் திமுக அரசு, தற்போது கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றப் பார்க்கிறது.

மக்கள் விழித்துக் கொண்டார்கள். திமுகவை புறக்கணிக்க தயாராகிவிட்டார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE