மதுரை மாநகராட்சியின் மிக இளம் வயது ஆணையாளர்: அரசியல் நெருக்கடிகளை சமாளித்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே மிக இளம் வயது ஆணையாளராக 28 வயது லி.மதுபாலன் பொறுப்பேற்றுள்ளதால், அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆரம்ப காலத்தில் நகராட்சியாக செயல்பட்டது. நகராட்சியாக செயல்பட்ட மதுரையின் முதல் மாநகராட்சி ஆணையாளராக 1933-ம் ஆண்டு எஸ்.சாமுவேல் பிள்ளை இருந்துள்ளார். அவருக்கு பிறகு 1971-ம் ஆண்டு வரை மொத்தம் 17 பேர் மதுரை நகராட்சியின் ஆணையாளராக இருந்துள்ளனர். அதன்பிறகு 1971-ம் ஆண்டு வெ.லெட்சுமிரதன் மதுரை மாநகராட்சியின் முதல் ஆணையாளராக இருந்துள்ளார். அவருக்குப் பிறகு இதுவரை தற்போது மாறுதலாகி சென்ற பிரவீன்குமார் வரை, 28 பேர் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றியுள்ளனர்.

புதிய மதுரை மாநகராட்சி ஆணையாளரக லி.மதுபாலன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இவருக்கு வயது 28. இந்த இளம் வயதில் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக இவர் பொறுப்பேற்றுள்ளது, அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு இளம் வயதில் மதுரை மாநகராட்சிக்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டதில்லை என்று மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவருக்கு முன் இருந்த சந்திப் நத்தூரி 31 வயதில்தான் மதுரை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். அவர், பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிறப்பாக செயல்பட்டதால் மக்களுடைய பாராட்டைப் பெற்றார். தற்போது அவரை விட மிக இளம்வயது ஆணையாளர் மதுரைக்கு கிடைத்துள்ளதால் அவர் தன்னுடைய சிறப்பான நடவடிக்கையால் மதுரையின் முகத்தை மாற்றுவார் என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவர் இதற்கு முன் இதுபோன்ற நேரடியாக மக்கள் தொடர்புடைய, அரசியல் கட்சியினர் நெருக்கடி கொண்ட அரசு நிர்வாகத்துறையில் பணிபுரியவில்லை. மேலும், மதுரை போன்ற பெரிய சுற்றுலா, மருத்துவம், வர்த்தக முக்கியத்துவம் பெற்ற மாநகராட்சியின் அடிப்படை பிரச்சினைகளையும், மக்களுடைய தேவைகளையும், அறிந்து கொள்வதற்கு புதிய ஆணையாளருக்கு குறைந்தப்பட்சம் 2 மாதம் முதல் 3 மாதம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. அதற்குள் தற்போது வடகிழக்கு பருவமழை வர உள்ளது. பருவமழை நேரத்தில் நகர் முழுவதும் சாலைகள் தோண்டிப்போடப்பட்டுள்ளது.

புதிய சாலைகள் போடாமல் ஜல்லிகள் மட்டுமே நிரம்பிப்போடப்பட்டுள்ளன. மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. மழைநீர் வழிந்தோடுவதற்கு வாய்க்கால்கள் இல்லை. மழைநீர் பாதாள சாக்கடை குழாயில்தான் செல்லும். அப்படி செல்லும்போது பாதாள சாக்கடை அடைப்பு, உடைப்பு ஏற்படும். ஆனால், தற்போது வரை மாநகராட்சி போதுமான அதிகாரிகள், பணியாளர்கள், வாகனங்கள் இல்லாமல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவில்லை. அதனால், இந்தப் பருவமழையை கடப்பது புதிய மாநகராட்சி ஆணையாளருக்கு சவாலாக இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அதேநேரத்தில் மழை எதிர்பார்த்தளவு பெய்யாவிட்டால் குடிநீர் பிரச்சினை ஏற்படும். வைகை அணை நீர் மட்டம் குறைவாக உள்ளது. ஏற்கனவே பெரியாறு கால்வாய் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க ஆட்சியருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். மழை வராமல் அவர்கள் தண்ணீர் திறந்தால், மாநகராட்சி குடிநீர் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும். அதனால், மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் புதிய ஆணையாளர், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய இருக்கும்.அதுபோல், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் மேயரை சுதந்திரமாக செயல்பட விடாமல் மதுரை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி போன்றோர் தலையிடுகின்றனர் எனக் கூறப்படுகிறது.

மாநகராட்சி கவுன்சிலர்கள் நான்கு பிரிவாக பிரிந்து செயல்படுகிறார்கள். இவர்களுடைய இந்த கோஷ்டிப் பூசலால் ஆணையாளராக வரக்கூடியவர்கள், இவர்கள் அனைவரையும் சமாளித்துச் செல்ல வேண்டியதாக இருக்கும். தற்போது வந்துள்ள ஆணையாளர் லி.மதுபாலன், இதற்கு முன் பணிபுரிந்த இடங்களில் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்துள்ளதால் இவர்கள் அனைவரையும் சமாளித்து செயல்படுவார் என அதிகாரிகள் நம்புகின்றனர். மக்களும் இந்த இளம் அதிகாரியின் செயல்பாடுகளையும், அதன் மூலம் மதுரையின் முன்னேற்றத்தையும் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE