நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: நீதிபதி ஆணையம் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சுமுகத் தீர்வுக்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனம் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நியோ மேக்ஸ் பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் வாதிடுகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கலாம் என மனுதாரர்கள் தெரிவிப்பது உண்மையல்ல. நிதி நிறுவன மோசடியில் வழக்குகளில் 1999-ல் தொடங்கி இப்போது வரை பல்வேறு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டதாக தெரியவில்லை. பல ஆணைய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் விலகிவிட்டனர்.

நியோ மேக்ஸ் தரப்பில் 32,048 முதலீட்டாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணக்குபடி பார்த்தால் 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுக்க 49 கோடியே 72 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படும். ஆனால் மனுதாரர்கள் தரப்பில் தங்களிடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி இடம் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 32,048 முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சரியாக பிரித்து கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு 697 சதுர அடி மட்டுமே கொடுக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புலன் விசாரணை முழுமை பெறாமல் நீதிபதி ஆணையம் அமைக்க முடியாது. இதுவரை 667 மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால் உத்தேசமாக 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

விசாரணைக்கு பிறகே எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது தெரியவரும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் போலீஸ் விசாரணை பாதிக்கும். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதையேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE