அரபிக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (அக்.19) காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று (அக்.20) காலை, 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து அக்.22ம் தேதி மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.24ம் தேதி வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அக்.23ம் தேதி வாக்கில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுகுறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.21ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.22ம் தேதி முதல் அக்.24ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்.25ம் தேதி முதல் அக்.26ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 - 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE