சென்னை: “மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பாஜக மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழக பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும் அடாவடித்தனமான அதிரடி பேச்சுகளால் ஊடக வெளிச்சம் பெற்று மிகப்பெரிய தலைவராக முடியும் என்று கனவு கண்டு செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளை சகித்துக் கொள்ளாமல் அவர்களை கேவலப்படுத்துவதோடு, களங்கப்படுத்துகிற அராஜக போக்கை கடைப்பிடித்து வருவதால் ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார். இவரது பேட்டி என்றாலே ஊடகவியலாளர்கள் நாங்கள் செல்ல மாட்டோம், வேறு யாரையாவது அனுப்புங்கள் என்று கூறும் அளவுக்கு இவர் மீது பத்திரிகையாளர்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்.
அடிப்படையில் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இவருக்கு மூத்த பாஜக தலைவர்கள் யாருமே ஆதரவாக இல்லை. இவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான். இந்தச் சூழலில் ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் அண்ணாமலை.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்கிற பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத அதிமுக, பாஜகவோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்குப் பிறகு அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதற்கு பிறகு பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார்.
» சிவகங்கை அருகே தன்னிறைவு பெற்ற ஊராட்சி: பெண் தலைவரை கவுரவித்த மத்திய அரசு
» அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நவ.6 வரை நீட்டிப்பு
இந்நிலையில், திமுகவில் கொங்கு மண்டல தளபதியாக செயல்பட்டு கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக, பாஜக கோட்டை என்கிற மாயத் தோற்றத்தைத் தகர்த்தெறிந்து தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற கடும் பணியாற்றி காரணமாக இருந்த செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க அண்ணாமலையின் பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தீட்டிய சதித் திட்டம் தான் கைது நடவடிக்கை. அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 8 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அவசியமில்லாமல் மூக்கை நுழைத்து அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு 4 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்டவுடனேயே நெஞ்சு வலி ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுக்கக் கூட வாய்ப்பு தராமல் புழல் சிறையில் அடைப்பதில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியது. இதனால், கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு இதய நோயாளியான செந்தில் பாலாஜி கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகிற சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும், அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று வாதாடியதால் சென்னை உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போலக் காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.
இன்றைக்கு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சூழலில் இந்தியாவை ஆளுகிற பாஜக கட்சியின் தமிழக தலைவர், தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஒரு மாநில பாஜக தலைவர் கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும். இத்தகைய குற்றத்தை கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிற அண்ணாமலை செய்திருக்கிறார்.
இவருக்குச் சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோ இல்லையோ, தமிழக மக்கள் வருகிற மக்களவை தேர்தலில் தமிழக பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பாஜக மிகப் பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago