கல்பாக்கம்: புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் சேகரமாகும் காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து பயோகாஸ் தயாரிக்க, மாவட்ட நிர்வாகத்தின் தடையில்லா சான்று கோரி ஊராட்சி நிர்வாகம் விண்ணப்பித்துள்ள நிலையில், சுகாதார சீர்கேட்டை தடுக்க இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் பெருமாள்சேரி, பிரப்பள்ளிமேடு, இந்திராநகர், பெரியார்நகர், அம்பேத்கர் நகர், விட்டிலாபுரம் சாலை மற்றும் கல்பாக்கம் நகரிய குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு, சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், குப்பை மற்றும் கழிவுகளும் அதிகளவில் சேகரமாகிறது.
நாள்தோறும் சராசரியாக 9 டன் குப்பை மற்றும் 4 டன் இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இந்திராநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உரப்பூங்காவில் கொட்டி மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தூய்மை பணியாளர்கள் தரம் பிரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி பகுதிகளில் இறைச்சி மற்றும் காய்கறி, பழவகை கழிவுகள் அதிகளவில் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, ஈசிஆர் சாலையையொட்டி, பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழுவேலி மற்றும் பங்கிங்ஹாம் கால்வாயில் இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக இரவு நேரத்தில் கொட்டுகின்றனர்.
» “காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்” - ஓபிஎஸ்
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. அதனால், இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரித்து மின்சாரம் உற்பத்தி செய்து ஊராட்சியின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்காக, அணுமின் நிலைய நிர்வாகத்திடம் சுற்றுப்புற கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தில் நிதி உதவி கோரி கடந்த 2022-ம் ஆண்டு மனு வழங்கப்பட்டது. மனுவை பரிசீலித்த அணுமின் நிலைய நிர்வாகம், பயோகாஸ் நிலையம் அமைப்பதற்கான நிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தடையில்லா சான்று கேட்டு ஊராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் வழங்கியது.
இந்நிலையில், சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் துர்நாற்றம் வீசுவதால், இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி ஊராட்சி பகுதியை தூய்மைப் படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, புதுப்பட்டினம் பழவியாபாரி ஜமாலுதீன் கூறியதாவது: பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், மழைக் காலங்களில் பஜார் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கால்வாய் மற்றும் சாலையோரங்களில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கையில்லை. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் பயோ காஸ் நிலையம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என்றனர்.
ஆனால், அதற்கான பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. பயோ காஸ் நிலையம் அமைந்தால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியின் கழிவுகளை இங்கு வழங்க முடியும். மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரித்து ஊராட்சி பகுதியில் உள்ள சமுதாயக்கூடங்கள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாம். அதனால், அதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கூறியதாவது: புதுப்பட்டினத்தில் அதிகளவில் குப்பை சேகரமாவதால், அவற்றை உடனுக்குடன் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. எனினும், ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகளை அகற்றும் பணிகள் சவாலானதாக உள்ளது. அதனால், இறைச்சிக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதை தடுக்கவும் மற்றும் ஊராட்சி பகுதியை தூய்மைப்படுத்தும் வகையில், பயோ காஸ் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அணுமின் நிலைய கடிதம் வரப் பெற்றதும், பயோ காஸ் நிலையத்துக்கு புதுப்பட்டினம் பகுதியில் நிலம் தேர்வு செய்துள்ளோம். அந்நிலத்தை அணுமின் நிலைய நிர்வாகத்தினரும் நேரில் பார்வையிட்டுள்ளனர். மேலும், இத்திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் தடையில்லா சான்று கேட்டுள்ளனர். அதனால், தடையில்லா சான்று கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளோம். மேற்கண்ட சான்று கிடைத்ததும் விரைவில் பணிகள் தொடங்கும். இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம் பயோ காஸ் மட்டுமின்றி திடக்கழிவு மற்றும் திரக்கழிவு உரங்களும் தயாரிக்க முடியும் என்றார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இதுவரையில் பயோகாஸ் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவில்லை. புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago