ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

By செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, த.மோ.அன்பரசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: பங்காரு அடிகளாரின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக, இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், "கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. . பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அரை நூற்றாண்டு சேவை: கடந்த 1970-ம் ஆண்டு மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவினார் பங்காரு அடிகளார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE