சென்னை: ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று காவல் துறைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அனைத்தும் விஷமாகிவிடும்' என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சியில் அதிகார வர்க்கத்தின் நிலை உள்ளது. 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையாக போற்றப்பட்ட தமிழகக் காவல்துறை, மக்களை அச்சுறுத்தி வந்த சட்ட விரோதிகளை ஒழித்த காவல்துறை, இன்றைக்கு திராவக மாடல் ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருவது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர்.
'முன் ஏர் போகும் வழியில் தான் பின்னேர் போகும்' என்பதற்கேற்ப, இந்த கையாலாகாத ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளை மெய்யாக்கும் பணியில் அதிகார வர்க்கம், குறிப்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது வெட்கித் தலைகுனியக் கூடியதாகும்.
கடந்த 29 மாத கால பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து மக்கள் அஞ்சி அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர். 'பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும்' என்று நினைப்பது போல், அதிகார மமதையில் கண்ணை மூடிக்கொண்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சொல்கிறார் என்றால், ஆமாம்.. ஆமாம்... என்று ஆமாஞ்சாமி போட்டு முழு பூசணிக்காயை தட்டு சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர் தமிழகக் காவல் துறை உயர் அதிகாரிகள்.
» பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கரூர் நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாமீன் தள்ளுபடி
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் பல்வேறு குற்றங்கள்: >ஆளும் கட்சியினரின் அராஜகங்கள்; >நேர்மையான காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது; >தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள்; >தனியாக வசிக்கும் முதியவர்களை திட்டமிட்டு கொலை செய்து, கொள்ளை அடித்தல்; >பொதுமக்கள் கண் முன்னே நடக்கும் கொடூர கொலைச் சம்பவங்கள்; >போதைப் பொருள் கேந்திரமாக மாறும் தமிழகம்; >ஆளும் கட்சி நிர்வாகிகளால் பாலியல் பாதிப்புக்குள்ளாகும் பெண் போலீசார்; சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு வழக்கு பதிவு; >ஆளும் கட்சியினருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த பெண் காவலரை, காவல் நிலையத்திற்குள் சென்றே மிரட்டும் ஆளும் கட்சி நிர்வாகிகள்; >கடைசியாக, பாதுகாப்பு குறைபாடு காரணமாக மாநிலத்தின் முதலமைச்சரே சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் திணறிய நிகழ்வு என்று இந்த விடியா ஆட்சியின் ஒருசில சீர்கேடுகளை ஊடகங்கள் தினசரி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதையெல்லாம் கவனித்தும் கவனிக்காததுபோல் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் குற்றப் பதிவுகள் குறைந்துள்ளன என்று கூறி இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மேலிட உத்தரவின்பேரில், காவல் நிலையங்களில் 90 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும்; கட்டப் பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
கஞ்சா வேட்டை 4.0 என்று சொல்லி, போதைப் பொருட்கள் விற்பவர்களைக் கைது செய்வதாக கணக்கு காட்டுகின்றனர். பிடிபடும் வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எணிக்கைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.
இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை, கைது என்று செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளன. ஏனெனில், ரிஷி மூலம், நதி மூலம் என்பது போல், போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது? என்பது பற்றியெல்லாம் விசாரணை மேற்கொண்டு போதைப் பொருள் ஆணிவேரை கைது செய்தால்தான் தமிழ் நாட்டில் போதை ஒழிப்பு சாத்தியமாகும் என்று கூறியிருந்தேன். இல்லையெனில், கஞ்சா ஆப்பரேஷன் 1.0, 2.0, 3.0, 4.0 என்று தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் கிடையாது. இதற்கு முதலமைச்சரும் தெளிவான பதில் அளிக்கவில்லை; இப்போதைய காவல் துறை உயர் அதிகாரிகளின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. இதன் மர்மம் என்ன என்பதை காவல் துறை உயர் அதிகாரிகள் விளக்கவில்லை.
, இந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் குற்றங்களில் சமூக விரோதிகள் மட்டுமல்ல, காவல் துறையைச் சார்ந்தவர்களே ஈடுபடுவது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்றும், தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொம்மை முதலமைச்சரை வலியுறுத்தி இருந்தேன். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பாகும்.
புண்ணுக்கு புணுகு தடவும் வேலையில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது கண்டு, இந்த ஆட்சியில் கொடுமைகளை அனுபவிக்கும் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தங்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தருணத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். விடியா திமுக ஆட்சியின் தாளத்திற்கு, மக்கள் விரோதச் செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.
திமுக இடும் கட்டளைக்கு தலையாட்டி, அறநெறி தவறும் அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தன் சார்பில் எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago