சென்னை: பங்காரு அடிகளார் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள், அவர் ஆன்மிகத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து புரட்சி செய்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பத்ம பங்காரு அடிகளார்(82) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா மற்றும் சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி,சுகாதாரம், சமூக சீர்திருத்த்ஙகளுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
» பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கரூர் நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாமீன் தள்ளுபடி
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: புதுச்சேரியில் இருந்து எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தவறாமல் பங்காரு அடிகளாரை சந்தித்து வணங்குவேன். மனதில் கணத்தோடு வந்து அவரை சந்திக்கும் பெண்கள், அவரிடம் இருந்து பதில்களை பெற்று மனமகிழ்ச்சியோடு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன். அவர் என்றும் இறைவனாக இருந்து நமக்கு வழிகாட்டுவார்.
முதல்வர் ஸ்டாலின்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.
அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.
அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது. கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைக்க நான் மேல்மருவத்தூர் சென்ற போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆசிரியராக பணியை தொடங்கிய பங்காரு அடிகளார், ஆன்மிகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திருக்கிறார். கல்வி மற்றும் மருத்துவத்தில் மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார். அவரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மிகச் சிறந்த ஆன்மிகவாதியான பங்காரு அடிகளார் மறைந்த செய்தி வருத்தத்தை தருகிறது. எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப்பெரிய ஆன்மிக புரட்சி செய்தவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பங்காரு அடிகளார் இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மிக மற்றும் கல்வி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாக விளங்கியவர். அவரது மறைவு நமது சமூகத்துக்கு பேரிழப்பு.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆன்மிகத்தில் பற்றுகொண்ட பலர் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று செல்வர். அவரது மறைவு, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மிகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் பல கல்வி நிறுவனங்கள் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கியவர். அவரது மறைவு செய்தியறிந்து துயருற்றேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் ஆன்மிக புரட்சியை செய்து பாமர மக்களிடையே பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். அவரது மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு. மகளிர் முன்னேற்றத்துக்காக பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவை. அவரது மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாதது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழத்தில் ஆன்மிக புரட்சிக்கு வித்திட்டவர், அனைத்து பெண்களும் கோவில் கருவறையில் பூஜைசெய்ய அனுமதித்து, சமுதாயத்தில் சமத்துவத்தை பரப்பிய ஆன்மீக செம்மல். அவரது இழப்பு ஆன்மீக உலகுக்கு பேரிழப்பாகும்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: ஆன்மிகம் என்பது பொதுவாழ்வையும், மக்களையும் விட்டு வெகுதூரம் விலகிச்செல்வது எனும் கருத்தை உடைத்தெறிந்தவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார். மக்களுக்காக எண்ணற்ற சேவைகள் செய்தவரின் மறைவு செய்திகேட்டு துயருற்றேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆன்மிகப் பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கிய பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவர் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரது புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: ஆசிரியராக வாழ்வை தொடங்கி, ஆன்மிகத்துடன் கல்வி, மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர் பங்காரு அடிகளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இவர்களுடன் பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசர் எம்பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவாக தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago