மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: மார்க்சிஸ்ட் வழக்கில் டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக காவல் துறை டிஜிபி நாளை (அக்.20) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிரச்சார பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல்துறை டிஜிபிக்கு அக்டோபர் 10-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, "பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தங்களது கட்சி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்வுகளில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணியை காரணம் காட்டி, தங்கள் பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்க வாய்ப்புள்ளது. எனவேதான், இந்த வழக்கு தொடரப்பட்டது" என்று வாதிட்டனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை (அக். 20) ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE