போடி அருகே மழைநீரில் மூழ்கிய ரயில்வே சப்வே: அபத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

போடி: சமீபத்தில் பெய்த மழை போடி அருகே உள்ள ரயில்வே சப்வேயை முற்றிலுமாக மூழ்கடித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கும், கால் நடைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி ஒன்றியம் பூதிப்புரம் அருகே அமைந்துள்ளது வலையபட்டி. இப்பகுதி வழியே மதுரை - போடி ரயில் கடந்து சென்று வருகின்றன. தண்டவாளத்தின் ஒரு பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. ஆகவே இப்பகுதி போக்குவரத்துக்காக ரயில்வே சார்பில் சப்வே அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே விவசாயிகள் விளை பொருட்கள், இடு பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். மேலும் காளவாசல், கிரஷர் உள்ளிட்ட தொழில்களும் நடைபெறுவதால் அதற்கான வாகனங்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றன.

அருகில் உள்ள மரக்காமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக இப்பகுதியை கடந்து சென்று வருகின்றன. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் இந்த சப்வேயில் தேங்கின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை சப்வேயை மூழ்கடித்தபடி தேங்கி கிடக்கிறது. கைப்பிடிச் சுவர் இல்லாமல் சுமார் 20 அடி ஆழத்திற்கு நீர் தேங்கி இருப்பதால் கால்நடைகள் தவறி விழும் நிலை உள்ளது.

அருகிலேயே குடியிருப்புகளும் அதிகம் இருப்பதால் மக்கள் யாரேனும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது தேங்கும் நீர் வாரக் கணக்கில் இதில் தேங்கி கிடப்பதால் இப்பகுதி போக்குவரத்து முற்றிலும் பாதித்து வருகிறது. விவசாயிகள் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை தலைச் சுமையாக பல கி.மீ.சுற்றி கொண்டு செல்கின்றனர்.

இதே போல் உரம், பூச்சிக் கொல்லி மருந்து, விதை போன்றவற்றை எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதைவிட இப்பகுதிகளில் விளையாடும் குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராட்சத நீர் தேக்கம் அமைந்துள்ளது. ஆகவே ரயில்வே நிர்வாகம் இந்த நீரை உடனடியாக வெளியேற்றி இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னத்துரை

இது குறித்து வலையபட்டி கிராமத் தலைவர் சின்னத்துரை கூறுகையில், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இப்பிரச்னை ஏற்படுகிறது. அருகில் உள்ளவர்கள் உயிரை கையில் பிடித்தபடி நடமாட வேண்டியதுள்ளது. தவளை சத்தத்தினால் பாம்புகளும் அதிகம் வருகின்றன. திறந்தவெளி கிணறு போல இருப்பதால் பெரிய பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE