சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது

By செய்திப்பிரிவு

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சின்னசாமி, கோகுல் ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிலர், சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதபோதகர் மீது வழக்கு: இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர். மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னிமலையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு செயல்படுகிறது. மற்றொரு மதத்தினரை அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்படுவார்.

சென்னிமலை சர்ச்சையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வரும் 20-ம் தேதி (நாளை) ஈரோடு ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE