தொடர் மழையால் தண்டவாளத்தில் மண் சரிவு: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து

By செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. குன்னூர் மலை ரயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.

நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 188 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. கல்லாறு - ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை விழுந்தது குறித்து ரயில்வே ஊழியர்கள் தகவல் அளித்ததையடுத்து, கல்லாறு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்ற வெகு நேரமாகும் என்பதால், ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு திரும்பியது. ரயிலில் பயணம் செய்த பயணிகளில் குன்னூருக்குச் செல்ல விரும்பிய 53 பயணிகள் பேருந்து மூலம் குன்னூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீத முள்ளவர்களுக்கு பயணக் கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டது.

குன்னூர் அருகே பழைய அருவங்காடு சாலையில் விழுந்த மரத்தை பார்வையிட்ட தீயணைப்புத் துறையினர்

மண் சரிவு அகற்றும் பணி காரணமாக நேற்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில், ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பழைய அருவங்காடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் உதவியுடன், மரங்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இப்பணியால், வாகனங்கள் மாற்று சாலையில் திருப்பி விடப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE