வேதாரண்யம் மீனவர்கள் 9 பேரை தாக்கி ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: கடலில் 2 பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாகத் தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன் மகாதேவி மீனவர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன், முருகேசன் (41), சுந்தர மூர்த்தி (55), ராஜ கோபால் (62), மகாலிங்கம் (60) ஆகிய 5 பேர் வானவன் மகாதேவி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு அதிவேக படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் வந்தனர். அவர்களில் இருவர் சுப்பிரமணியனின் பைபர் படகில் ஏறி 5 மீனவர்களையும் கட்டை, இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு, படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, 4 டார்ச் லைட்கள், 2 சிக்னல் கருவிகள், 600 கிலோ வலை மற்றும் பிடித்து வைத்திருந்த மீன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர், காயமடைந்த 5 மீனவர்களையும் கடலில் தள்ளிவிட்டு, தாங்கள் வந்த படகில் தப்பிச் சென்றனர். அதேபோல, கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் இரவு வானவன்மகாதேவி மீனவர் தெருவைச் சேர்ந்த முருகாஎன்பவருக்கு சொந்தமான பைபர் படகில்செல்வம் (35), முருகானந்தம் (36), சுப்பிரமணியன் (37), சண்முகவேல் (35) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதே இலங்கை கடற்கொள்ளையர்கள் அதிவேக படகில் இங்கும் வந்து, 4 மீனவர்களையும் கட்டை, இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, செல்போன்,150 கிலோ வலை, ஷீலா மீன் 40 கிலோ, வெள்ளி அரைஞாண் கயிறு, வெள்ளி செயின் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். 2 படகுகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காயமடைந்த 4 மீனவர்களும் படகில் கரைக்கு திரும்பியபோது, வழியில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட மற்ற 5 மீனவர்களையும் பார்த்து, மீட்டனர். பின்னர், காணாமல் போன சுப்பிரமணியனின் படகையும் தேடிக் கண்டுபிடித்து, 2 படகுகளில் 9 மீனவர்களும் நேற்று காலை வானவன் மகாதேவி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த செப்.23, செப்.25, அக்.6 ஆகிய தேதிகளில் செருதூர் மற்றும் வெள்ளப் பள்ளம் மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் நடைபெற்றுள்ள தாக்குதல் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE