“தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது” - சத்தியமங்கலத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சத்தியமங்கலத்தில் பேசியதாவது: தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களவைத் தேர்தலில், பிரதமராக மோடியைத் தேர்வு செய்து, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு ஒரு அபாய மணியை அடிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

‘2028-ம் ஆண்டு முடியும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் இருப்போம்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு வளர்ந்த நாட்டில் உங்கள் குழந்தைகள் வசிக்கப் போகிறார்கள். ஆனால், தமிழகம், ரூ 7.50 லட்சம் கோடி கடன் பெற்று, இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக மாறியுள்ளது.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகள் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்தார்கள். தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை சுத்தம் செய்தால்தான், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். தற்போதைய ஆட்சியில், பிரதமரோடு சேர்ந்து 69 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் மீது கூட குண்டூசி அளவுக்கு கூட ஊழல் புகார் சொல்ல முடியாது.

திமுக ஆட்சியில் உள்ள 35 அமைச்சர்களில், கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பாக 11 அமைச்சர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. 5 அமைச்சர்கள் மீது பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்குவதால், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என திமுகவினர் சொல்கின்றனர். ஆனால், பால்விலை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தி, ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக செலவழிக்க வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் கலைவாணி விஜயகுமார் நிகழ்வில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE