தென்காசி அச்சங்குட்டத்தில் 76 மாணவர்களின் டிசி பறிமுதல் - 11 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: தென்காசியில் 76 மாணவர்களின் டிசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 11 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அச்சங்குட்டத்தில் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கட்டிடம் பழமையானதால் 2018-ம் ஆண்டில் மற்றொரு இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி அங்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கிறிஸ்தவ ஆலயம் கட்ட முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனால் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சமரசம் ஏற்படவில்லை.

இதற்கிடையே, கிறிஸ்தவ நிர்வாக பள்ளியில் படித்த 76 மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தும் சூழலை சிலர் உருவாக்கி வருவதாக சுரண்டை போலீஸில் வட்டாட்சியர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், கிறிஸ்தவ, இந்து மதத்தினரிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாக ராஜேந்திரன், பெருமாள்சாமி, மாரிமுத்து உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 11 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘நாங்கள் மத ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. அரசுப் பள்ளி கோரி கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளோம். வருவாய் அதிகாரிகளிடம் பொய்யான புகாரைப் பெற்று எங்கள் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மதத்தின் அடிப்படையில் இளைஞர்கள் மனதில் வெறுப்புணர்வு, ஒற்றுமையின்மை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் மனதில் மதத்தின் பெயரில் பிளவை உண்டாக்குகின்றனர். மனுதாரர்கள் தங்களின் கோரிக்கைக்கு சட்டப்பூர்வமான தீர்வை அணுகாமல் குழந்தைகள் மத்தியில் மதத்தின் பெயரில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.மனுதாரர்கள் சட்டம் மற்றும் விதிகளை மீறி தனி பள்ளி நடத்துகின்றனர். அங்கு பயிலும் குழந்தைகளை வருவாய் அதிகாரிகள் பக்கத்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளி கட்ட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தப்பள்ளியை மதத்தின் அடிப்டையில் அரசே கட்ட வேண்டும் என்பது தேவையற்றது.

மனுதாரர்களின் செயல்பாடுகளால் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. குழந்தைகளின் பள்ளி மாற்றுச்சான்றிதழ்களை மனுதாரர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால் மனுதாரர்களின் முந்தைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள் தங்களிடம் இல்லை. பெற்றோர்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அரசு தரப்பு மறுத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குழந்தைகளின் பள்ளி மாற்றுச்சான்றிதழ்களை பெற்றுள்ளது. அந்த மாற்றுச்சான்றிதழ் அடிப்படையில் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க முயன்றபோது மனுதாரர்கள் தடுத்துள்ளனர். கிராமத்தில் நிலவும் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காணும். இந்த விவகாரத்துக்கும் மனுதாரர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதனால் மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. கருணை காட்டவும் முடியாது. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE