இபிஎஸ் பங்கேற்கும் சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: சங்கரன்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுக தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவு பெற்று 52-ம் ஆண்டு தொடங்கி உள்ளது. அதிமுக 52வது தொடக்க விழாவை ஒட்டி அதிமுக தலைமை அறிவுறுத்தல்படி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் நடுவக்குறிச்சி சாலையில் தளவாய்புரத்தில் இன்று மாலை அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி, பாதுகாப்பு, ஒலிபெருக்கி, டிஜிட்டல் போர்டு அமைக்க அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே சங்கரன்கோவில் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அரசு தரப்பில், அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE