செங்கல்பட்டு: சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று கள ஆய்வில் முதலமைச்சர் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.18) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இன்றைய ஆய்வுக் கூட்டத்தின்போது நாம் முக்கியமான திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். குறிப்பாக, மாநகராட்சி சாலைப் பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளைக் குறித்தும் நாம் ஆய்வு செய்தோம்.
இவ்வகை திட்டப்பணிகள் குறிப்பாக சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றித் தருவது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவதை காண முடிந்தாலும், ஒருசில பணிகளில் தொய்வு இருந்ததையும் நாம் கவனித்தோம். அதற்கான விளக்கத்தையும், அது குறித்து என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், துறைத் தலைவர்களும் தெரிவித்தார்கள். அதன்படி நீங்கள் அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
திட்டங்களில் காலதாமதம் ஏற்படுவதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நான் முந்தைய ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது என்னவென்றால், அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்பதை அந்தத் திட்டத்தைத் துவக்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம். உத்தேச பணி முடியும் நாட்களுக்குள் குறிப்பிட்ட பணி முடிவடையாதபோது திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளினால் அந்தப் பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.
எனவே, எக்காரணம் கொண்டும் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும், குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடுகளுமின்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனவே, அனைத்து துறைத் தலைவர்களும் தங்கள் துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உங்களை அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக இலக்கு மக்களின் குடும்பங்களை மேம்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பயன்பெறுவதை உறுதி செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற வழிவகை செய்வது, போன்ற பலவழிகளிலும் ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் வளம்பெற நீங்கள் உதவமுடியும். பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் அரசு திட்டங்களின் பயனைப் பெறுவதோடு வழிகாட்டுதல்களையும் பெறவேண்டும்.
அதிலும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெறுவது, பள்ளி, கல்லூரி அளவில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல், அவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதையும், அவர்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதையும் உங்கள் முக்கிய பணிகளில் ஒன்றாக நீங்கள் கருதவேண்டும். இந்த நல்ல தருணத்தில் நான் இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்;
> முதலாவதாக, தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மின் கட்டணம் குறைப்பு > இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டுக்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 1 யூனிட்டுக்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்.
மக்களுக்காக இயங்கும் இந்த அரசு அவர்களை நோக்கிச் செல்வதன் ஒரு முயற்சி தான் இந்த கள ஆய்வில் முதலமைச்சர் என்ற ஆய்வுக் கூட்டம். நேற்றைய தினம், பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் இந்த மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு திட்ட செயலாக்கம் பற்றி நேரடியாக அறிந்து உங்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில், அரசின் திட்டங்கள் மேலும் செம்மைபடுத்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகள் அவைகளை எல்லாம் நீங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் சிறப்பாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமாக நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது, தினமும் குறிப்பாக நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சினை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும்.
அப்படி உங்களது மாவட்டங்களைப் பற்றி ஏதாவதுசெய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்தவகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலை முதல் duty-ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி, அரசின் திட்டங்களை, சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கும் உங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் நல்ல பெயரை ஈட்டித் தரவேண்டும்" என்று முதல்வர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago