''பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்'' - திண்டுக்கல் சீனிவாசன்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சைத்தான் என்று உங்களால் சொல்லப்படுகின்ற அந்த கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அந்த கூட்டணியில் இருந்து எப்போது விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். பள்ளிவாசல் தெருவாக இருந்தாலும் சரி, அரசமர தெருவாக இருந்தாலும், பாஜக உடன் கூட்டணி வைத்ததால் ஒட்டுகேட்டு வராதே என்று இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள்.

உங்களில் ஒருவராக உங்களின் அன்பு தம்பியாக இருக்கின்ற எங்களைப் போன்றவர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிதால் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார். உங்களுக்கும்(இஸ்லாமியர்களுக்கும்) எங்களுக்கும் என்ன பிரச்சனை என்றால் கூட்டணிதான் பிரச்சினை. முஸ்லிம்களை வெறுக்கின்ற பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். இதனை எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லுங்கள் என்றீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை மாறி மாறி வந்தது. பாஜக கூட்டணியில் திமுகவும் இருந்துள்ளது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரது அமைச்சரவையில் திமுகவினர் இருந்தார்கள். மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றது. ஆனால், திமுகவை நீங்கள்(முஸ்லிம்கள்) ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், எங்களை வெறுத்தீர்கள். ஆனாலும் பரவாயில்லை. காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர். தீய சக்தியான திமுகவை வீழ்த்தி, அதிமுக ஆட்சிக்கு வராவிட்டால் எம்ஜிஆரின் ஆத்மா சாந்தியடையாது. இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவால் அதிமுக வளரவில்லை; அதிமுகவால்தான் பாஜக வளர்கிறது. இனிமேல் நாங்கள் செத்தாலும் பாஜக உடனோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளவர்கள் யாருடனோ கூட்டணி சேர மாட்டோம்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE