தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 18) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, கூடிய லேசான மழைபெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 முதல் 78.87 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தமிழகத்தில் அக். 17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருப்பூர் உப்பாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, களியல், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தீர்த்தாண்டதானத்தில் தலா 8 செ.மீ. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கோவை மாவட்டம் சூலூர், விமான நிலையம், திருச்சி மாவட்டம் தென்பரநாட்டில் தலா 7 செ.மீ. மழை பதிவானது.

தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE