கோவை: தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை லங்கா கார்னர் அருகே தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. பீளமேடு, ஆவாரம்பாளையம், ரேஸ்கோர்ஸ், கணபதி, டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழைகொட்டியது. இந்த மழையால் சாலையோர தாழ்வான இடங்கள், லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி சாலை சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு ஸ்டேட் வங்கி சாலையில் வாகனங்களில் வந்த சிலர், தொடர் மழையின் காரணமாக, லங்கா கார்னர் பாலம் அருகே சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒதுங்க முயன்றனர். தேங்கிய மழை நீரில் மின்சார வயர் துண்டாகி கிடந்துள்ளது.

அங்கு பைக்கை நிறுத்திய ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி சாலையில் விழுந்தார். மொபட்டில் வந்த மற்றொருவர் தாவிக்குதித்து அங்கிருந்து நகர்ந்து சென்றார். கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து மயங்கிய நபரை மீட்டபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

ரேஸ்கோர்ஸ் போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் சுங்கம் பைபாஸ் 2-வது வீதியில் வசித்து வந்த செல்வ ராஜ் (55) என்பதும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வழங்கல் அலுவலகத்தில் கணினி மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரது சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

பலத்த மழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் அகற்றினர். அதேபோல், ரயில்வே பாலங்களின் கீழ்பகுதியில் தேங்கிய சேறு, சகதிகளை நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

குழியில் சிக்கிய லாரி: கோவை உக்கடத்திலிருந்து புட்டுவிக்கி சாலை வழியாக, குனியமுத்தூர் நோக்கி சரக்கு லாரி நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. புட்டுவிக்கி சாலையில் உள்ள கோயில் அருகே வந்த போது, மழைநீர் நிரம்பியிருந்த குழியில் லாரியின் டயர் சிக்கியது. இதில் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீஸார், கிரேன் மூலம் லாரியை தூக்கி நிறுத்தினர். 3 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சில வாரங்களுக்கு முன்னர் தான் இங்கு மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): அன்னூர் 2.40, மேட்டுப்பாளையம் 2, சின்கோனா 26, சின்னகல்லாறு 22, வால்பாறை பிஏபி 55, வால்பாறை தாலுகா 54, சோலையாறு 16, ஆழியாறு 11.60, சூலூர் 70, பொள்ளாச்சி 3, கோவை தெற்கு 24, பீளமேடு 69.20, வேளாண் பல்கலைக்கழகம் 20.50, பி.என்.பாளையம் 2.40,

பில்லூர் அணை 2, தொண்டாமுத்தூர் 25, சிறுவாணி அடிவாரம் 22, மதுக்கரை 11, போத்தனூர் 32, மாக்கினாம்பட்டி 8, கிணத்துக் கடவு 3, ஆனைமலை 5 மில்லி மீட்டர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE