காட்டாங்கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

காட்டாங்கொளத்தூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மறைமலைநகர் செல்லும் வழியில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படி நேற்றும் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசு திட்டங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் அப்பகுதியில் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்த ஆய்வு கூட்டத்துக்கு செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணிடம் எதற்காக நிற்கிறீர்கள். என்ன பிரச்சினை? மனு கொடுக்க வந்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது முதல்வர் “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் ஊழியர்கள் பணியாற்றும் பொதுப்பிரிவு அறைகளுக்கு சென்று பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அங்கு பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் பணியின் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கூறும்போது, “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 66 மையங்களில் சுமார் 5,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். குடிநீர் விநியோகப் பணிகள், பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

பின்னர் புறப்படும்போது முதல்வர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE