சட்டம் ஒழுங்கை பேணி, குற்றங்கள் நிகழாமல் காக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டம் ஒழுங்கை பேணி, குற்றங்கள் நிகழாமல் காக்க வேண்டும் என்றுகாஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சிமாநில நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க நேற்று காலை 11 மணிக்கு இல்லத்தில் இருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் அமோக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மறைமலைநகரில் தங்கிய முதல்வர், மாலை4 மணிக்கு கூட்ட அரங்குக்கு வந்தார்.நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத் தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா,உள்துறை செயலர் பெ.அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஏ.அருண்,உளவுப்பிரிவு ஐஜி செந்தில்வேலன், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர் கூட்டத்தில்முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ளது. குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே, காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் பெரிய அளவில் எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனால் தான் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது.

இந்த நிலை தொடர காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து, அமைதியான சூழல்நிலவ தேவையான நடவடிக்கை களை தொடர வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். கஞ்சா, போதைப் பொருள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் போது, அப்பகுதி காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், சமூக வலைதளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதிய கருத்துகளையும், வதந்திகளை பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும். பொய்யானசெய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல் துறையின் மீது மக்களுக்கு நல்லெண்ணம், நம்பிக்கை ஏற்படுத்துவது காவல்துறையைச் சேர்ந்த உங்களின் பொறுப்பு. குற்றம் இழைத்தவர்களுக்கு விரைவாக உரிய தண்டனையைப் பெற்றுதர வேண்டும்.

‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனுதாரர்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிவதற்காக நான் முடிவு செய்திருக்கிறேன். எனவே, ஒவ்வொரு மனுவின் மீதும் முறையான விசாரணை செய்ய வேண்டும்.

எஸ்பி.க்களுக்கு அறிவுறுத்தல்: வாரந்தோறும் புதன்கிழமை மாவட்ட எஸ்பி.க்கள் குறைதீர் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.சில மாவட்டங்களில் எஸ்பி.க்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இதுவும்தவிர்க்கப்பட வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் மற்றும் வசதிகளை எஸ்பி.க்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

அடுத்து வரும் சில மாதங்கள் மிகவும் முக்கியமானவை. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலத்தில், பொது இடங்களில் ஏற்படும் மக்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நான் கூறிய கருத்துகளை, காவலர் முதல் காவல்கண்காணிப் பாளர் வரை மனதிலே நிறுத்தி, அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தரும்வகையில் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும். சட்டம்-ஒழுங்கினை பேணிக் காத்து, குற்றங்கள் நடைபெறாமல் காத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதையடுத்து, திருமுடிவாக்கம் தொழில் துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்