அக்.30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கூடாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

By கி.மகாராஜன் 


மதுரை: மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகளால் அக்டோபர் 30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், "மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அக்டோபர் 27-ல் மருது சகோதரர்களின் குருபூஜை, 30-ம் தேதி தேவர் குரு பூஜை நடைபெறுகிறது. இதற்காக அக்டோபர் 24 முதல் பாதுகாப்பு பணியில் 7,000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவர்.

கடந்த ஆண்டு தேவர் குருபூஜையின்போது 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு காரணமாக குற்றங்கள் குறைந்து வருகிறது. இதனால் அக்டோபர் 30-க்கு பிறகு ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்" என்றார். இதன்பின்னர் மனு மீதான தீர்ப்பை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE