70 ஆண்டுகள் பழமையான பீளமேடு ரயில் நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?

By செய்திப்பிரிவு

கோவை: கோவை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பீளமேடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், 3 நடைமேடைகள், முன்பதிவு மையம் ஆகிய வசதிகளுடன் இயங்கி வருகிறது.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. சுமார் 90 ரயில்கள் நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தை கடந்து சென்றாலும், மங்களூரு - சென்னை எழும்பூர் ரயில், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - ஈரோடு மெமு ரயில் என குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டுமே பீளமேட்டில் நின்று செல்கின்றன. 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கான கட்டமைப்பு இருந்தாலும், மக்கள் எளிதில் அணுக முடியாத நிலையில் பீளமேடு ரயில்நிலையம் அமைந்துள்ளது.

என்ன சிக்கல் ? - இதுதொடர்பாக பீளமேடு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வை.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பீளமேடு ரயில் நிலையமானது அவிநாசி சாலையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் உட்புறத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பாதை மோசமான நிலையில் உள்ளது. தெருக்களில் தெருவிளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் ரயில் நிலையத்தை அணுகுவது சிரமமாக உள்ளது.

ரயில் பாதையை வாகனங்கள் கடந்து செல்ல மேம்பாலம் உள்ள அதேசமயம், மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதைக்கான தேவை உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே ஸ்டீல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் கிடங்கு மற்றும் உணவு விநியோக தானிய குடோன் இருப்பதால், பெரும்பாலும் சரக்கு ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றன.

ரயில் நிலையத்தில் இருந்து, முக்கிய சாலை அல்லது பீளமேடு பேருந்து நிலையம் செல்வதற்கு, ஆட்டோ அல்லது சொந்த வாகனங்களின் தேவை உள்ளது. எனவே, இந்த ரயில் நிலையத்துக்கு சென்று வருவது சிரமமாக உள்ளதால், மக்கள் இந்த ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த ரயில் நிலையம் இந்த இடத்தில்தான் உள்ளது என மக்கள் அறிந்துகொள்ள எங்கேயும் அறிவிப்பு பலகை கிடையாது.

கோவை பீளமேடு ரயில் நிலையத்தின் ஒருபகுதியில்
நிறுத்தப்பட்டுள்ள சரக்கு வாகனங்கள் .

இதற்கு மாற்றாக, இந்த ரயில் நிலையத்தை 1 கிலோமீட்டர் தொலைவில் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த ஹோப்காலேஜ் டைடல் பார்க் அருகில் இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு போதிய இடவசதி உள்ளது. அங்கு ரயில்நிலையத்தை மாற்றினால் அவிநாசி சாலையை எளிதாக அடைவதுடன், விமான நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை எளிதாக அணுக முடியும்.

மேலும், சரவணம்பட்டி, கணபதி, சேரன் மாநகர், சத்தியமங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மக்கள் விரைவாக அணுகும் சூழல் உருவாகும். கொடிசியா அரங்கு அருகில் உள்ளதால், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்ல வசதியாக இருக்கும். பேருந்துகள், டாக்ஸி, ஷேர் ஆட்டோ எளிதில் கிட்டும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், பொதுமக்களின் ரயில் பயன்பாடு அதிகரிப்பதோடு, ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE