அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா: கட்சி சார்பில் 62 பேருக்கு நிதியுதவி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக 52-வது ஆண்டு விழாவை ஒட்டி அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (அக்.17) கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை அதிமுக மாநாட்டு, அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தபோது எதிர்பாராமல் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் உள்பட 62 தொண்டர்களின்குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், இன்று காலை (17.10.2023 - செவ்வாய் கிழமை), பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி, அதிமுக தலைமையகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனையடுத்து, கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும், எதிர்பாராத விதமாக மரணமடைந்த 8 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வீதம் 48 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கி ஆறுதல் கூறினார். பலத்த காயமடைந்த 22 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியாக தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 33 லட்சம் ரூபாயை வழங்கினார்.மேலும் 27 பேரின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

அதே போல், 11.7.2022 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு வருகை தந்து வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்த ஒருவரின் குடும்பத்துக்கு குடும்ப நல நிதியுதவியாக 7 லட்சம் ரூபாயையும்; தொடர்ந்து, விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாயையும்; காயமடைந்த 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 25,000/- வீதம், 75,000/- ரூபாயையும் வழங்கினார். ஆக மொத்தம் 62 பேர்களுக்கு, 1 கோடியே 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார். நிதியுதவியை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

அடுத்த நிகழ்ச்சியாக, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சா.கலைப்புனிதன் எழுதிய ``புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி ஒரு பார்வை’’ என்ற நூலினை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், கட்சியின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை, இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் தொகுத்து வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE