கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

16-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 14 செமீ, மதுரை மாவட்டம் பேரையூரில் 10 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, தொண்டி, விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 9 செமீ, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 8 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

17-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE