தமிழகத்தில் சிறு வணிகர்கள், நிறுவனங்களுக்கான ‘சமாதான்’ திட்டம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: வணிகர்கள், நிறுவனங்களுக்கான வணிகவரி நிலுவை மேல்முறையீடு பிரச்சினைகளுக்கு முடிவுகாணும் வகையில் தமிழக அரசு அறிவித்த புதிய‘சமாதான்’ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வரித் துறை இடையே உருவாகும் வணிக வரி நிலுவை, மேல்முறையீடு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசால் ‘சமாதான்’ திட்டம் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரி நிலுவை தொடர்பாக சமாதான் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், ‘‘தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைதொடர்பாக 2.12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.43 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி. எனவே, பழைய நிலுவை தொகையை வசூலிப்பதில் சமாதான் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடி முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரி மதிப்பீட்டு ஆண்டில்ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராத தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவர்கள் தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

நிலுவை தொகையை வணிகர்கள் கட்டுவதற்கு முன்வரும் நாள் வரை அவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, சிறு வணிகர்களுக்கான சமாதான் திட்டம் நேற்று முதல் அமலுக்குவந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்துக்கான சான்றிதழ்களை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், வணிகவரித் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, சமாதான்திட்டத்தை அறிவித்ததற்காக வணிகர்சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இத்திட்டம் 4 மாதங்களுக்கு, அதாவது, 2024 பிப்.15 வரை நடைமுறையில் இருக்கும் இதில், நிலுவை தொகை தள்ளுபடியால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் பயனடைகின்றனர்.வரி நிலுவைக்காக பிணைக்கப்பட்டுள்ள 1,002 சொத்துகள் வணிகர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE