ஆலைகளின் தொடர் அடைப்பு போராட்டத்தால் பரிதவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்: கஞ்சித் தொட்டிகள் திறப்பு

By இ.மணிகண்டன்

பட்டாசு ஆலைகளின் காலவரையற்ற அடைப்பு போராட்டத்தால் வேலையிழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும், போதிய உணவில்லாமலும் பரிதவித்து வருகின்றனர் பட்டாசுத் தொழிலாளர்கள்.

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த டிச. 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசுத் தொழிலாளர் பீதிக்கு ஆளாயினர். அதோடு, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அதனால், பட்டாசு கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்கள் நிறுத்தப்பட்டு, தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதால் செய்வது அறியாது திகைத்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடந்த டிச. 26-ம் தேதி முதல் கதவடைப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். பட்டாசு ஆலைகளின் காலவரையற்ற அடைப்பு காரணமாக பட்டாசு தொழில் முடங்கியது. .

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பட்டாசு ஆலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு எந்த கொள்கை முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே 20 நாளாக வேலையிழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. அதோடு, குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும் பட்டாசுத் தொழிலாளர் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. இதற்காக, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே கிராமங்களில் பட்டாசு தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டிகளும் திறக்கப்பட்டு வருகின்றன.

சிவகாசி அருகே மீனம்பட்டியைத் தொடர்ந்து ஆனையூரிலும், செங்கமலப்பட்டியிலும் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. செங்கமலப்பட்டியில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் ஜீவா தலைமை வகித்தார்.

அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலரும் முன்னாள் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர், மாவட்டத் தலைவர்கள் ராஜாசொக்கர், தளவாய் பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவகாசி நகரச் செயலர் குமரன், திமுக ஒன்றியச் செயலர் தங்கராஜா, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகிரிசாமி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலர் சதுரகிரி உள்பட பலர் கலந்துகொண்டு கஞ்சித் தொட்டியைத் திறந்துவைத்து பட்டாசு தொழிலாளர்களுக்கு கஞ்சியும் அன்னதானமும் வழங்கினர்.

பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்று கஞ்சியையும், உணவையும் வாங்கிச்சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்