“சாதிய, பாலின ரீதியாக சந்திர பிரியங்கா குறிப்பிட்டது தவறு” - தமிழிசை ஆவேசம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “நான் அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ மீறவில்லை. சட்டவிதிகளின்படி நடக்கிறேன். சந்திர பிரியங்காவை தந்தை போல முதல்வரும், சகோதரர்கள் போல் அமைச்சர்களும் பார்த்து கொண்டனர். நல்ல அன்பான குடும்பத்தை சுயநலம் காரணமாக சந்திர பிரியங்கா கெடுத்துக் கொண்டார்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமாவா, நீக்கமா என்பது பற்றி பதில் சொல்ல மாட்டேன். ஏற்கெனவே சொல்லிவிட்டேன். மத்திய அரசு ஒப்புதல் தாமதமாவது பற்றி கேட்கிறீர்கள். நிர்வாக ரீதியாக சில சட்டத்திட்டங்கள் உள்ளது. நிர்வாக ரீதியாக வரும்போது தெரியும். பல உண்மைகள் அப்போது தெரியும். சந்திர பிரியங்காவை தந்தை போல முதல்வரும், சகோதரர்கள் போல் அமைச்சர்களும் பார்த்து கொண்டனர். நல்ல குடும்பமாக வேலை செய்யும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

அனைத்து பெண்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பெண் அமைச்சருக்கு மரியாதை தருவதில் யாரும் குறைவைக்கவில்லை. என் தரப்பிலும் எந்த தவறும் இல்லை. இக்குற்றச்சாட்டை பிரியங்கா சொல்லியிருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்போதும் துணைநிலை ஆளுநருடன் சண்டை போடவே விரும்புகிறார். நாராயணசாமி விமர்சனம் செய்யும் அளவுக்கு நாங்களோ, நானோ இல்லை.

ஆளுநர் என்றாலே அவர் ஏதாவது சொல்லுகிறார். நாராயணசாமி கூறுவதுபோல் நான் அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ மீறவில்லை. அவர்கள் (காங்கிரஸ் அரசு) பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் தந்தார்கள். அதேபோல் பட்டியலின பெண் எம்எல்ஏ இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. அவர்களுக்கு இவ்விஷயத்தில் பேச உரிமையே இல்லை.

சந்திர பிரியங்கா நல்ல குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அவர் சாதியையும், பாலினத்தையும் குறிப்படுவது தவறு. அதுபோல கருத்து சொல்லியிருக்கக் கூடாது. பிரியங்காவுக்கு பக்க பலமாக அரசு இருந்தது. பெண் முன்னுக்கு வருவது சிரமம். போராடி தக்க வைத்து கொள்ள வேண்டும். சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன். ஆனால் அவர் தனது அட்மின் வைத்து ஆளுநர் பொய் சொல்வதாக கூறுவதை உடன்படமாட்டேன். நான் விமர்சனத்தை தாண்டி வந்தேன். சட்டவிதிகளின்படி நடந்து கொள்கிறேன்.

நல்ல அன்பான குடும்பத்தை சுயநலம் காரணமாக அவரே கெடுத்துக்கொண்டார்.அவரது குற்றச்சாட்டு அனைத்துக்கும் பதில் சொல்ல முடியாது. நான் இவ்விஷயத்தில் முதல்வர் மனதில் இருந்ததை சொன்னேன். இது கட்சித்தலைவருக்கும் அமைச்சருக்கான பிரச்சினை. இதில் பொதுவெளியில் பார்த்ததை சொல்கிறேன். நான் உறுதுணையாக இருந்தும் சந்திர பிரியங்கா பயன்படுத்திக்கொள்ளவில்லை.

பல உண்மைகள் வெளிவரும்போது தெரியும். சந்திர பிரியங்காவுக்கு முக்கியத் துறைகளை தந்துள்ளோம். ஒதுக்கப்பட்டிருந்தால் தந்து இருப்பார்களா? தமிழகத்தில் இதுபோல் துறைகளை ஒதுக்கியுள்ளார்களா? இதைபற்றி தெரியாமல் கனிமொழி பேசுகிறார். சந்திர பிரியாங்கா வெளியிட்ட 9 பக்க சாதனைகள், அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது. நீங்களாக இவ்விஷயத்தில் கதை எழுதாதீர்கள். தனது அமைச்சரவையில் உள்ளோரை நீக்கவும், சேர்க்கவும் அமைச்சர்கள் பணியை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் முதல்வருக்கு உரிமை உண்டு. மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். தூய்மையான மனதுடன் பணிபுரிந்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE