தேனியில் தொடர் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான வருசநாடு, கூடலூர், தேக்கடி, குரங்கணி, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் நீராதாரங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பல மாதமாக மணல் வெளியாக மாறியிருந்த மூலவைகையில் தற்போது நீரோட்டம் தொடங்கியுள்ளது.கடந்த வாரம் லேசான நீர்வரத்தும், பின்பு தண்ணீர் வற்றி மணல்வெளியாகவும் இருந்தநிலையில் தற்போது இங்கு சீரான நீர்வரத்து உள்ளது.மேகமலை பகுதியில் பெய்து வரும் மழையினால் சுருளி மற்றும் மேகமலை அருவிகளில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குரங்கணி பகுதியில் பெய்து வரும் மழையினால் மலைத் தொடர்களில் சிற்றாறுகள் உருவாகி உள்ளன. ஆகவே கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாகி போடி அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணையில் நீர் அருவி போல பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.

கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்குள் இருந்த நிலையில் 2ஆயிரத்து 165அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 123அடியாகவும், நீர்வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கனஅடியாகவும் உள்ளது.

வைகை அணையைப் பொறுத்தளவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்வரத்து இல்லாதநிலையில் தற்போது விநாடிக்கு ஆயிரத்து 567கனஅடியாகவும், நீர்மட்டம் 55.5அடியாகவும் உயர்ந்துள்ளது. சோத்துப்பாறையில் அதிகபட்சமாக 95 மிமீ., மாவட்ட அளவில் சராசரியாக 27 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதே போல் வைகையின் துணைஆறுகளில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் அணைகளில் உயர்ந்து வரும் நீர்மட்டம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE