“சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தை” - ராமதாஸ் காட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: “செப்டம்பர் மாத இறுதிவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை குறித்து வலியுறுத்தி வந்த தமிழக அரசும், அதை ஆளும் கட்சியும் இப்போது அது குறித்து வாயைத் திறக்க மறுப்பதுதான் மிகவும் விந்தையாக இருக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், சமூக நீதிக் கடமையை நிறைவேற்றும் நோக்குடன் ‘சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் சமூக நீதியைக் காக்கவும், நிலைநிறுத்தவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், விழிப்புணர்வும் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், சமூக நீதியின் மண் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் மக்களிடம், குறிப்பாக தமிழக அரசுக்கு இதுகுறித்த விழிப்புணர்வும், அக்கறையும் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படாதது கவலையளிக்கிறது.

இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் மறக்க முடியாத நாள்கள் பல உண்டு. அந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் நாள் அக்டோபர் 2-ஆம் நாள் ஆகும். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அந்த நாளில் தான் பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன. பிஹார் அரசின் இந்த சமூக நீதி நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்று உள்ளன. சமூக நீதிக்கான இந்த நடவடிக்கையை வரவேற்காதவை மத்திய அரசும் தமிழக அரசும் தான்.

பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நிலை உள்ளிட்ட 19 வகையான விவரங்கள் திரட்டி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பிஹார் மாநில அரசைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு இதுவரை வெளியிடப்படாத சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடப்போவதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. ஒடிசா மாநில அரசும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடப்போவதாக கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், தமிழக அரசு மட்டும் இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. செப்டம்பர் மாத இறுதிவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை குறித்து வலியுறுத்தி வந்த தமிழக அரசும், அதை ஆளும் கட்சியும் இப்போது அதுகுறித்து வாயைத் திறக்க மறுப்பதுதான் மிகவும் விந்தையாக இருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் பலமுறை கிடைத்த போதும், அதை பயன்படுத்திக் கொள்ளாமல் வேண்டுமென்றே வாய்ப்பை நழுவ விட்ட அநீதியைத் தான் தமிழக ஆட்சியாளர்கள் இழைத்துள்ளனர். சமூக நீதி மண்ணுக்கு இது அழகல்ல.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அஞ்சுவதற்கு அது ஒன்றும் பாவமல்ல; அது பரிகாரம். ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டதைப் போன்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தமிழநாட்டில் உள்ள சாதிகளை அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் வரிசைப்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகை, சமூக நிலை, கல்வி நிலை, வேலைவாய்ப்பு நிலவரம் உள்ளிட்ட காரணிகளை அறிந்து, அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியை வழங்குவதற்கான கருவிதான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு. அது தேவையில்லை என்று கூறுவதற்கு ஒரு காரணம் கூட இல்லை.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் 100% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் தந்தைப் பெரியாரின் நிலைப்பாடு ஆகும். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் 100% இ ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை பொருட்படுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் சமூக நீதி கனவை நனவாக்க இது சிறந்த வாய்ப்பு. ஆனால், அவரது வழிவந்தவர்கள் இதற்கு மறுப்பது ஏன்?

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் தேவையை 44 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். எனது இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை சாலையோரங்களில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூட புரிந்து, சமூக நீதி மாணவர்களாக மாறினார்கள். ஆனால், அந்த சமூக நீதிப் பாடத்தை அரசு இன்னும் படிக்காதது ஏமாற்றமளிக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதனடிப்படையிலான இடஒதுக்கீடு ஆகியவை குறித்து தமிழக மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

அந்த சமூக நீதிக் கடமையை நிறைவேற்றும் நோக்குடன் ‘சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. வரும் 26.10.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் நானும், பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரிகள் மற்றும் சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்