புதுச்சேரியில் பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, பழுதானதால் ரோந்து படகு கலவரத் தடுப்பு வாகனங்கள் வீணாகும் அவலம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: உரிய நேரத்தில் பழுதை நீக்காததால் ரூ.2 கோடி மதிப்பிலான படகு, பல கோடி ரூபாய் மதிப்பிலான கலவரத் தடுப்பு வாகனங்கள், சாதனங்கள் வீணாகி வருகின்றன. புதுச்சேரியில் நிர்வாக நடைமுறை சிக்கல்களால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

புதுச்சேரி காவல்துறையை நவீனப்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு அதிநவீன சாதனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் போலீஸாரின் செயல்படும் திறன் மேம்படும். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும். கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும். சாகர் கவாச் என்ற பெயரில் புதுச்சேரியில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில கடலோர காவல்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியோர் கடலுக்குள் ரோந்து சென்று விசாரிப்பது வழக்கம். ஆனால் புதுச்சேரி மாநில கடலோர காவல்படைக்கு சொந்தமான படகுகள் ஓராண்டாக வேலை செய்யாததால் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இதுபற்றி கடலோர காவல்படை தரப்பில் விசாரித்தபோது, “கடலோர பாதுகாப்புக்காக புதுச்சேரியில் ரூ.2 கோடியில் வாங்கிய படகு பழுதானது. பேட்டரி பழுதாகி நீண்ட நாட்களாக கடலில் நின்றிருந்ததால் என்ஜின் வீணாகிவிட்டது. தற்போது இதை சீரமைக்க பல லட்சம் ரூபாய் இல்லாமல் அப்படியே கடலில் நிற்கிறது

.

தற்போது மீனவர் மாயமானால் அவர்களை மாநில காவல்துறையால் மீட்க முடியாது. இந்திய கடலோர காவல்படை உதவிதான் வேண்டும். உடனே நிதி ஒதுக்கி கோப்பு அனுமதியை விரைவுப்படுத்தும் நிர்வாக நடைமுறையை எளிதாக்கி இருந்தால் முன்பே சரி செய்திருக்க முடியும்” என்றனர்.

கடலோர பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ரோந்து படகு தேங்காய்திட்டு துறைமுகத்தில் காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கலவரத் தடுப்புக்கு வாங்கப்பட்ட வாகனம், மீட்பு பணிக்கான கிரேன் கோரிமேடு மைதானத்தில் வீணாகி வருகின்றன.

காவலர் பயிற்சிக்கு வாங்கப்பட்ட டிரைவிங் ஸ்டுமிலேட்டர், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வாங்கப்பட்ட பயரிங் ஸ்டுமிலேட்டர் அறைக்குள் பூட்டியே கிடக்கின்றன. சரியான நேரத்தில் சீரமைக்காத பல ரோந்து வாகனங்கள், பலசாதனங்கள் பழுதானதால் புதிதாக கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இதுபற்றி காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, “சிறிய மாநிலமான புதுச்சேரியில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கலவரத் தடுப்பு வாகனங்கள் வாங்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது. 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட வருண் வாகனத்தை இயக்க, பயிற்சி பெற்ற ஓட்டுநரே இல்லை. அது அப்படியே ஒரே இடத்தில் நிற்பதால் பழுதாகிவிட்டது.

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் பழுதாகி நிற்கும்
கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு.
படங்கள்: சாம்ராஜ்

தற்போது புதிதாக அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வருண் வாகனம் தேவை என்று கேட்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக வாங்கப்பட்ட கிரேனை பழுது பார்க்க அதனை வாங்கிய செலவில் பாதித்தொகையை செலவிட வேண்டியுள்ளது. அது தற்போது கவனிப்பாரின்றி கிடக்கிறது. ஒரு அறைக்குள் அமர்ந்து அனைத்து வாகனத்தையும் ஒட்டிப் பார்க்கும் அடிப்படையில் வாங்கப்பட்ட டிரைவிங் ஸ்டுமிலேட்டர் எலி கடித்து நாசமாகி கிடக்கிறது” என்றனர்.

இதற்கான காரணம் குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “முறையாக பராமரிக்கவில்லை. கோடிக்கணக்கில் செலவிட்டு வாங்கப்பட்ட வாகனங்கள் தற்போது வீணாகி வருகின்றன. காவல்துறையில் பின்பற்றப்படும் நிர்வாக நடைமுறைகள் தான் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது. ஒரு பொருள் பழுதானால் அதை உடனே சரிபார்த்தால் பயன்பாட்டில் இருக்கும். ஆனால் ஒரு சிறிய பழுது கூட சரியான நேரத்தில் செய்ய முடியவில்லை.

இதனால் கூடுதல் செலவினத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அரசு வாகனம் பழுதானால் கோப்பு தயாரித்து பழுது நீக்க அனுமதி பெறவே 6 மாதங்களாகி விடுகிறது. அதன்பிறகே நிதிஒப்புதல் கிடைக்கும். அக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் செலவாகும் நிலை ஏற்படும்.

வழக்கமான நடைமுறையை ஆட்சியாளர்கள் மாற்றினால்தான் அரசு நிதி வீணாகாது. சாதனங்கள், வாகனங்கள் பழுதானால் அதுதொடர்பான கோப்புகளுக்கு உடனே அனுமதி பெற நிதி ஒதுக்க வேண்டும்” என்கின்றனர். புதுச்சேரி அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE