சென்னை: சென்னையில் கேரவனுக்கு நிகராக மாநகராட்சியின் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் புதுவரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாநகர பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 200 எலெக்ட்ரானிக் கழிப்பறைகளும், ‘ஒப்பனை அறைகள்’ என்ற பெயரில் 250 நவீன கழிப்பறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு அவையும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இத்தகைய சூழலிலும் பொது இடங்களில் பெண்களுக்கான கழிவறை பிரச்சினை என்பது இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் கழிவறைகள் இருந்தாலும் பாதுகாப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகள் கருதி பெரும்பாலான பெண்கள் அவற்றை பயன்படுத்த முன்வருவதில்லை. இதற்கு சில கழிப்பறைகள் பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
இதுதவிர, திருமணமாகி கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் அவதிப்படுவதையும் ஆங்காங்கே காண முடியும். இதற்காக அவர்கள், பேருந்து நிறுத்தங்களில் பாலூட்டும் அறைகளை தேடி அலையும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை காலங்காலமாக பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வுதான் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணும் வகையில், பெண்களுக்காகவே சென்னையில் புதுவரவாக ‘ஷீ-டாய்லெட்’ எனப்படும் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறையுடன் கூடிய வாகனங்களை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படும் வகையில் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களை கடந்த செப்.20-ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.
» ‘லியோ’ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் - ரஜினி வாழ்த்து
» 27 தமிழக மீனவர்கள், படகுகளை மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த ஒப்பனை அறை வாகனம் ஒன்றின் விலை ரூ.29.13 லட்சமாகும். இவை டெல்லியில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தவாகனத்தில் 4 கழிவறைகள் (3 இந்தியன் 1 வெஸ்டர்ன்), முகம் பார்க்கும் கண்ணாடி, கைக் கழுவும் திரவம், உடை மாற்றும் சிறிய அறை உள்ளிட்டவையும், எல்இடி திரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. திரையில் பொது சுகாதாரத்துக்காக மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையில் ஒரு சினிமா கேரவனை போன்று இதன் அமைப்பு இருக்கும். உடை மாற்றும் அறையை பாலூட்டுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது இடங்களில் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க சிரமப்படும் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, சந்தைகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், சுற்றுலா நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் சுழற்சி முறையில் மண்டலத்துக்கு ஒன்று என்கிற வகையில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. இத்திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப, ‘ஷீ-டாய்லெட்’ வாகனம் குறித்து மாநகர பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பெரம்பூரை சேர்ந்த லூர்து மேரி: பொது இடங்களில் கழிப்பறை எங்குள்ளது என்பதை தேடி அலைய வேண்டிய நிலை இன்றும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. விழாக்கள் நடைபெறும் இடங்கள், பொதுக்கூட்டங்கள், கடற்கரை, சந்தைகள் போன்ற இடங்களில் இந்த நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் நிறுத்தப்பட்டால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பாதுகாப்பாகவும் இருக்கும்.
அதேசமயம் இத்திட்டத்தை முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பெரும்பாலும் மாநகராட்சி கழிப்பறைகளில் பராமரிப்பு என்பது பெரும் குறைபாடாகவே இருந்து வருகிறது. பல்வேறு திட்டங்கள் வரவேற்கும்படி தொடங்கப்படுகின்றன. ஆனால் பராமரிப்பின்மையால் செயலிழந்து விடுகின்றன. அதுவே சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே மாநகராட்சி இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த காயத்ரி: பெண்கள் வேலைக்கு, கடைகளுக்கு என பல இடங்களுக்கு சென்று வருகிறோம். எங்களுக்கு இதுபோன்ற நடமாடும் ஒப்பனை அறைகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டால், உபயோகமாக இருக்கும். மாநகராட்சியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. முக்கியமாக வாகனம் ‘பிங்க்’ நிறத்தில் இருப்பதால் எங்கு நின்றாலும் எளிதில் அடையாளம் காணமுடிகிறது.
சில பேருக்கு இது ஆடம்பரமாக தோன்றலாம். இன்றைய காலகட்டத்தில் இது முக்கிய தேவையா? என்றும் கருதலாம். ஆனால் எங்களுக்கு இது முக்கியமானதுதான். ஏனென்றால் மழைக்காலங்களில் இவை பெரிதும் பயன்படும். உடை மாற்றவும், தாய்ப் பால் ஊட்டவும், இயற்கை உபாதை கழிக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆண்களுக்கு அந்தகாலம் முதல் இந்த காலம் வரை இயற்கை உபாதை கழிப்பது என்பது பிரச்சினையாகவே இருந்ததில்லை. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை.
இதுபோன்று ஒப்பனை அறையை ஆங்காங்கே நிறுத்தி வைப்பதை நாங்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதை ஒரு விழிப்புணர்வு திட்டமாகவே நான் பார்க்கிறேன். இத்திட்டத்தை விரிவுபடுத்தி அரசு தேர்வுகள் நடைபெறும் இடங்களிலும் கொண்டு வரவேண்டும்.
கொரட்டூர் டி.கலா: படிப்பு, வேலை போன்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் சந்திக்கும் முக்கியமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ‘ஷீ-டாய்லெட்’ எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சென்னை மாநகராட்சிக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நடமாடும் ஒப்பனை அறை வாகனம் மிகவும் சுத்தமாக உள்ளது. இதேபோல தொடர்ந்து பராமரித்திட வேண்டும்.
ஆனால் வாகனத்தினுள் கழிப்பறையும், நடமாடும் இடமும் ஒரே சமதளத்தில் அமைந்துள்ளன. இதனால் கழிவறை தண்ணீர், வெளியே கைகழுவும் இடங்களுக்கு வந்துவிடுகிறது. மேலும் கழிவறைகளில் ‘சிங்க்’ இல்லாததும் ஒரு குறை. எனவே இவற்றை மாநகராட்சி கவனத்தில் கொண்டு உடனடியாக சரி செய்திட வேண்டும். நல்லத் திட்டம் சிறு குறைபாடுகளால் செயல் இழந்துவிடக் கூடாது.
மேலும் சென்னையில் இருக்கும் மக்கள் நெருக்கடியில் 15 வாகனம் என்பது போதவே போதாது. தேவைக்கேற்ப நடமாடும் கழிவறைகளை மாநகராட்சி முக்கிய இடங்களில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தண்ணீர் பற்றாக்குறை இன்றியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நடமாடும் ஒப்பனை அறைகள், சென்னையில் பெண்கள் எதிர்கொள்ளும், அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப நடமாடும் ஒப்பனை அறை வாகனத்தில் கூடுதலாக சில வசதிகளை இணைத்து வாகனத்தை மேம்படுத்திடவும் மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சியின் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சுத்தமான கழிப்பறை வசதிகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டுப்பட்டுள்ளன. இந்த முயற்சி, நகரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள மகளிருக்கான 15 நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள், ராயபுரம், அயனாவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு தலா 2 என்கிற வகையிலும், தண்டையார்ப்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களுக்கு தலா ஒன்று என்கிற வகையிலும், திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களுக்கு சேர்த்து ஒன்று எனவும் நிறுத்தப்பட்டுள்ளன.
இவை பெரும்பாலும் கடற்கரை, மக்கள் கூடும் இடங்கள், விழாக்கள் போன்ற இடங்களில் நிறுத்தப்படும். அந்த வகையில் மெரினா கடற்கரையில் 2, தி.நகரில் 2, திருவான்மியூர் மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் தலா ஒன்று என தினசரி நிறுத்தப்பட்டு வருகின்றன. பராமரிப்புக்காக ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அடுத்த கட்டமாக வாகனத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்கவும், பெண்களுக்கான உடைகளை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இத்துடன் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் கழிவறை குறித்து புகார் அளிக்கும் வசதியையும் கொண்டுவர உள்ளோம். புகார்களை கண்காணிக்க மாநகராட்சியில் குழு அமைக்கப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
அதேநேரம் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். பெரும்பாலானோர் கழிவறையை பயன்படுத்திய பிறகு தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்துவதே இல்லை. கழிப்பறையின் தேவைகளை உணர்ந்து பொதுமக்களும், அதன் பராமரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago