சென்னை: "உலக வங்கி நிதி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான 'உரிமைகள் திட்டத்தின்' கீழ் முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16) தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியது: "மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனை பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தும் 92 மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சேவை புரியும் பணியாளர்களுக்கு, மதிப்பூதியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியினை வழங்குவதற்காக 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் அரசு சாரா நிறுவனங்களுக்கு மானியம் வழங்கியும், சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி இருக்கிறோம்.
உயர் கல்வி பயிலும், 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. UPSC, TNPSC நடத்தும் தொகுதி 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு முதன்மை தேர்வு எழுத தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க ஆணை, தேசிய நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெறும் மாற்றுத் திறனாளிகள் உரிய சமயத்தில் கடனை திருப்பி செலுத்தும்போது, கடனுக்கான வட்டி தொகையை மாநில அரசே செலுத்துகிறது.
» 27 தமிழக மீனவர்கள், படகுகளை மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
» தேசம் vs குடும்பம்: சல்மான் கானின் ‘டைகர் 3’ ட்ரெய்லர் எப்படி?
தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் நிறுவனமாக நியமிக்கப்பட்டு, 14 ஆயிரத்து 271 மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் செலவில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் மற்றும் பெட்டிக்கடை தொடங்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என, இவற்றில் எது குறைவான தொகையோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருவாய் துறையின்கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவி பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம், சுயமாக முடிவெடுக்கும் உரிமைகள் ஆகியவற்றினை ஊக்குவிக்கும் விதமாக தனியே மாநில ஆணையரகம் மூலம் வழக்குகளில் தீர்வு கண்டும், மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளூர் மட்டக் குழு அமைத்து “பாதுகாவலர் சான்றிதழ்” வழங்கியும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மனநலம் பாதிப்படைந்தவர்களின் நலனுக்காக, “இடைநிலை பராமரிப்பு மையம்” மற்றும் “மீண்டும் இல்லம்” என்னும் புதிய திட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது.இதனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள மனநலம் பாதிப்படைந்த பெண்கள் மீண்டும் சமுதாயத்தில் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனநலம் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மூன்று இல்லங்கள் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகைகள் உயர்த்தி, வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைக்கும் நடவடிக்கையாக புதிய கட்டடங்கள் அனைத்திலும், மின்தூக்கி, சாய்வுதளப்பாதைகளை அமைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு உகந்த கழிவறைகள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தடையற்ற சூழல் அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் மாவட்ட அளவிலும் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சைகை மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அரசு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடையற்ற சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க மாநில விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடையற்ற சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசின் முன்னெடுப்பு நடவடிக்கையாக, மாற்றுத்திறனாளிகள் இயக்குநரக வளாகத்தில் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு முயற்சியினைப் பாராட்டி, புதுடெல்லியில் நடைபெற்ற ’எம்பசிஸ்’ விழாவில் "மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தால்" 2023-ஆம் ஆண்டுக்கான “உலகளாவிய வடிவமைப்பு விருது”, “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தடையில்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்கும் இருப்பிடங்களிலும் தடையற்ற சூழல் அமைய மாவட்ட அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் “விடியல் வீடு” என்னும் திட்டம், முன்னோடி திட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் “உரிமைகள் திட்டம்” 1773 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து மறுவாழ்வு நிபுணர்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு மேலும் சிறப்பாக செயல்படுத்தலாம் என்பதை இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசித்து, உறுப்பினர்கள் அரசுக்குப் பரிந்துரைக்கும் கருத்துக்கள் ஆய்வுசெய்து நுட்பமாகச் செயல்படுத்தப்படும்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago