இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 49 தமிழர்கள் வருகை: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 49 பேர் நேற்று தமிழகம் வந்தனர். சென்னை வந்தவர்களை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். டெல்லி வருபவர்கள், அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி முதல் விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேரும், இரண்டாவது விமானத்தில் 28 பேரும் தமிழகம் வந்துள்ளனர்.

மேலும் 3-வது மற்றும் 4-வது விமானங்கள் மூலம் 49 தமிழர்கள் டெல்லி வந்தனர். பின்னர், அங்கிருந்து நேற்று காலை தமிழகம் வந்தடைந்தனர்.

சென்னைக்கு மட்டும் 32 பேர் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பின்னர் சென்னை, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட அவரவர் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இதுவரையில் 128 பேர் இஸ்ரேலில் இருந்து, தமிழகம் திரும்ப விருப்பம் தெரிவித்து, பதிவு செய்திருந்தனர். அவர்களில் 110 பேர் இன்று வரை வந்து விட்டனர். பதிவு செய்தவர்களில் இன்னும் 18 பேர் மட்டுமே வர வேண்டும். புதிதாக மேலும் சிலர் பதிவு செய்வார்கள் என்று தெரிய வருகிறது. எவ்வளவு பேர் பதிவு செய்தாலும், அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள்.

நாட்டிலேயே தமிழக அயலக தமிழர் நலத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை மூலம் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்க, தனி செயலி உருவாக்கப்படவுள்ளது.

எந்த நாட்டிலாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், விரைந்து தொடர்பு கொள்ள வசதியாக இந்த செயலி இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE