சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள், மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்படும்’ என்று, கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான செய்தி, மக்கள் தொடர்பு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஏஎம்வி பிரபாகர் ராஜா எம்எல்ஏ, பொதுப்பணித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி,செய்தி துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
» “இந்த விருது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது” - ஆட்ட நாயகன் முஜீப்!
» அடுத்த 15 ஆண்டுகளுக்கு AI சார்ந்த துறைகளில் அதிக வாய்ப்பு: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியின் மகனாக ஏபிஜெ அப்துல் கலாம் கடந்த 1931 அக்.15-ம் தேதி பிறந்தார். ராமேசுவரத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். சென்னை எம்ஐடி கல்லூரியில் விண்வெளி பொறியியல் பயின்று, பின்னர் அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி பிரிவில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய கலாம், பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்து, செயற்கைக் கோள் ஏவுகணை (எஸ்எல்வி) குழுவில் இடம்பெற்று, செயற்கைக் கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். எஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-1 என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். அவரது இத்தகைய வியக்கத்தக்க செயலை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981-ல்பத்மபூஷன் விருது வழங்கியது.
1963-1983 காலகட்டத்தில் இஸ்ரோவில் பல பணிகளை சிறப்பாக செய்த கலாம், 1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’, ‘அணுசக்தி நாயகன்’ என்றும் போற்றப்பட்டார்.
மக்களின் ஜனாதிபதி: இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25-ம்தேதி கலாம் பதவியேற்றார். 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தஅவர் ‘மக்களின் ஜனாதிபதி’ என்றுஅன்போடு அழைக்கப்பட்டார்.
மாணவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட கலாம், ‘‘கனவு காணுங்கள். அந்த கனவு உறக்கத்தில் வருவதாக இருக்க கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்’’ என்று தன்னம்பிக்கை ஊட்டினார். ‘அக்னி சிறகுகள்’, ‘இந்தியா 2020’ போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். 1990-ல் பத்மவிபூஷன், 1997-ல் பாரத ரத்னா என பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் கலாம்.
முதல்வர் புகழாரம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பள்ளியில் பயின்று தனது அறிவுத் திறத்தால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த அறிவியலாளர் அப்துல் கலாம் பிறந்தநாளில், அவர் பயின்று,பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது சிலையை திறந்து வைத்தேன். படித்து முன்னேறும் இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, கலாமின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும். அறிவியல் பார்வையோடு உலக அரங்கில் இந்தியா சிறந்து விளங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago