தமிழகம் முழுவதும் செயலி முன்பதிவு வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் கூறியதாவது: செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக, ‘வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும்.

பைக் டாக்சிகள் வேண்டாம்: பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். சரக்கு ஏற்றி இறக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களை சவாரிக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கும் நடைமுறையை கடுமையாக்க வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் பெற வேண்டாம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்ததை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், கோப்புகளை இறுதி செய்யும் பணிகளை அரசு மேற்கொள்ள தாமதம் ஆவதாக துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்.16-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

16-ம் தேதி சென்னை சின்னமலையில் உள்ள தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவன அலுவலகம் முன்பும், 17-ம் தேதி மதுரை, திருச்சி, கோவையில் போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் முன்பும், 18-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலும் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் 12 சங்கங்கள் மற்றும் சங்கங்களை சாராத ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படும் கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட 1.20 லட்சம் வாகனங்களும் 3 நாட்கள் இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE