நவம்பர் முதல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: திருமாவளவன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: நவம்பர் மாதம் முதல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபடவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வடக்கு மண்டலத்துக்கான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலிடப்பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் புதிய மாவட்டச் செயலாளர்கள், பழைய நிர்வாகிகளோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.

கிராமம்தோறும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே வெற்றி பெறவேண்டும். அதற்கு நமது தொண்டர்களின் வாக்குகள் அவர்களுக்குச் சென்று சேர வேண்டும். எனவே, 40 தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்.21-ம் தேதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது. இதில் வடக்குமண்டலத்துக்குட்பட்ட 13 மக்களவைத் தொகுதிகளில் உள்ள அமைப்பு ரீதியான கட்சி மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்தல் களத்தில் கைதேர்ந்தவர்கள் மற்றும் தோழமை கட்சியை சார்ந்த சில நிர்வாகிகள் பங்கேற்று, வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.

முகவர்கள் என்ற அடிப்படையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பர். இதைத் தொடர்ந்து மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர் நியமனப் பணிகள் முடுக்கிவிடப்படும். நவம்பர் மாதத்தில் தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட இருக்கிறேன். 13 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE