போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: துறைச் செயலருக்கு சிஐடியு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகபோனஸ் மற்றும் கருணைத்தொகை சேர்த்து 20 சதம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனாவை காரணம் காட்டிபோனஸ் தொகை குறைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் இருந்த நிலையில். நிர்வாக நலன் கருதி 10 சதவீதம் போனஸை பெற்றுக் கொண்டோம். ஆனால், 2021-22-ம் ஆண்டும் 10 சதவீதமே வழங்கப்பட்டது.

எனவே, 2022-23-ம் ஆண்டுக்கு அவரவர் பெற்ற ஊதியத்தில் 25 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க வேண்டுகிறோம். போனஸ் பட்டுவாடா சட்டத்தில் உள்ள ஊதியவரம்புகளை கணக்கில் கொள்ளாமல், முழுமையாக பெற்ற ஊதியத்துக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.

போனஸ் பட்டுவாடா சட்டத்திருத்தத்தின்படி 2021-22-ம் ஆண்டுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களோடு பேச்சு நடத்தி போனஸ் தொகைமுடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE