அம்மா திறன் வேலைவாய்ப்பு, பயிற்சி திட்டம்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்:

"பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகவும்; தொழில் முனைவோர் செயல் திறன் மேம்பாடு அடைவதற்கான நாற்றங்காலாகவும்; நிலைத்த வேலைவாய்ப்பினை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கீழ்க்காணும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அளிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

1. தமிழ்நாட்டில் 31.3.2014 அன்றைய நிலவரப்படி 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்தொழில் நிறுவனங்களிலும், புதியதாக ஏற்படுத்தப்படும் தொழில் நிறுவனங்களிலும் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கிடும் வகையிலும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் "அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 25 வயது வரையிலான பொறியியல், தொழிற் கல்வியியல், தொழில் பட்டயப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலையில்லாத இளைஞர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கான வேலை குறித்த பயிற்சியினை இளைஞர்களுக்கு அளிக்கும். பயிற்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும். ஆறு மாத பயிற்சி முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 12,000 ரூபாயினை அரசு வழங்கும். 6 மாத பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி பெற்றவர்களின் திறமை, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால், அதாவது National Skill Development Corporation-ஆல் அறியப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அரசு வழங்கும்.

ஆறு மாத பயிற்சி முடித்த இளைஞர்களை தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும். வேலையில் சேர்த்துக் கொண்ட பின் வழங்கப்படும் ஊதியம் 5000 ரூபாய் அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் இவற்றுள் எது உயர்ந்ததோ அத்தொகை சம்மந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 25,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் 30 சதவீதம் மகளிருக்கென ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்காக 32 கோடியே 50 லட்சம் ரூபாயினை அரசு வழங்கும். இத்திட்டம், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தகுந்த ஊதியத்துடன் கூடிய பயிற்சியினை பெற்று வேலைவாய்ப்புகளை பெற வழி வகுக்கும்.

2. சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களை; குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை; சுய தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் தமிழக அரசு உருவாக்கியுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன் வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75,000 ரூபாய் என்ற அளவில் தற்போது அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை 25 விழுக்காடாக அதிகரித்து, அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

3. சிட்கோ நிறுவனம், அரசால் நிறுவப்பட்ட 35 தொழிற்பேட்டைகளையும்; சிட்கோவால் நிறுவப்பட்ட 62 தொழிற்பேட்டைகளையும் பராமரித்து வருகிறது. நடப்பாண்டில் மேலும் மூன்று தொழிற்பேட்டைகள் திண்டுக்கல் மாவட்டம் ஆர். கோம்பையில் 51.26 ஏக்கரிலும்; காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் 43 ஏக்கரிலும்; மற்றும் கரூர் மாவட்டம் புஞ்சை காளக் குறிச்சியில் 54.27 ஏக்கரிலும் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று தொழிற்பேட்டைகளுடன் சேர்த்து சிட்கோ நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும்.

மேற்கண்ட 3 இடங்களில் 148.53 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள புதிய தொழிற் பேட்டைகளில் 23 கோடி ரூபாய் செலவில் தார் சாலைகள்; தெரு விளக்குகள்; குடிநீர் வசதி; பொது வசதி மையம் போன்றவை ஏற்படுத்தப்படும். இந்த தொழிற்பேட்டைகளில் வாகன உதிரி பாகங்கள்; பொது பொறியியல் அலகுகள்; பின்னலாடை தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகள் என ஏறத்தாழ 345 தொழில் மனைகள் அமையப் பெற்று ஏறக்குறைய 10,000 பேர் வேலைவாய்ப்பினை பெறுவர். இந்தத் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான செலவினம் சிட்கோவின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

4. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக அதாவது, சிட்கோவின் மூலமாக, விழுப்புரம் மாவட்டம் காட்டு வன்னஞ்சூர்; தருமபுரி மாவட்டம் பர்வதனஹள்ளி; அரியலூர் மாவட்டம் மல்லூர்; மற்றும் நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொழிற் பேட்டைகளில் 13 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை; மழைநீர் கால்வாய்; சிறு பாலம்; தெரு விளக்கு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலமாக திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில்; காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம்; சேலம் மாவட்டம் கருப்பூர்; திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை; மற்றும் மதுரை மாவட்டம் கப்பலூர் ஆகிய 5 இடங்களில் எனது ஆணைப்படி மகளிருக்கென தனியாக தொழிற் பூங்காக்கள் 358.44 ஏக்கர் பரப்பளவில் 1198 தொழில் மனைகளுடன் உருவாக்கப்பட்டு; 2001-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. இத்தொழிலகங்களில் 9,100 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

மேற்கண்ட தொழிற் பூங்காக்களில், மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை போட்டித் திறனுடன் மேற்கொள்ள, தொழில்நுட்பம்; தொழில் திறன்; விற்பனை உதவி ஆகியவைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, இந்த 5 மகளிர் தொழிற் பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நேர்த்திமிகு மையத்தில் பொது காட்சியகம்; மற்றும் விற்பனை மையம்; பொது வியாபார மையம்; பொது கூட்ட அரங்கம்; பொது பயிற்சி கூடம்; நிர்வாக அலுவலகம்; வங்கி; குழந்தைகள் காப்பகம்; மற்றும் மருத்துவ மையம் போன்றவை அமையப் பெறும். ஒவ்வொரு மையமும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் இவை அமைக்கப்படும். எனது தலைமையிலான அரசு இத்தொகையை மானியமாக வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

6. சென்னை கிண்டியிலுள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி மையம், தொழிற்சாலைகளுக்கு தொழில் அறிவு மிக்க மனித ஆற்றலை உருவாக்கித் தரும் நோக்கத்துடன் கருவி மற்றும் அச்சு, அதாவது கூடிடிட யனே னுநை; குளிர்சாதனம் மற்றும் குளிர்பதனியல் கலையில் மூன்றாண்டு பட்டயப் படிப்பினை புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தி வருகிறது. தற்போதுள்ள கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஒப்புதல் விதிகளுக்கு உரியதாக இல்லை. எனவே, 30,000 சதுர அடி பரப்பளவில் கூடுதல் கட்டடம் ஒன்று 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7. டான்சி நிறுவனத்தின் கீழ், மர அறைகலன் உற்பத்திக்கென மட்டும் 9 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் பாரம்பரிய மர அறைகலன்களை மட்டும் தயாரிக்க முடிகிறது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் நோக்கத்துடனும்; தரமான பொருட்களை தயார் செய்து உரிய நேரத்தில் வழங்குவதற்காகவும்; ஒரு புதிய மர அறைகலன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை டான்சி நிறுவனத்தின் கீழ் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புதிய மர அறைகலன் உற்பத்தித் தொழிற்சாலை நவீன உபகரணங்களுடன் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைக்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தொழில் வளம் மேலும் பெருகி; வேலைவாய்ப்புகள் அதிகரித்து; தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்