பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா: காப்புக் கட்டுதலுடன் இன்று தொடங்கியது

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி விழா காப்புக் கட்டுதலுடன் இன்று (அக்.15)தொடங்கியது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (அக்.15) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நடைபெற்றது. கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருஆவினன்குடி கோயில், தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், சண்முகர்,வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயில், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இணை ஆணையர் செ.மாரிமுத்து, கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போகர் ஜீவசமாதியில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலை தொடர்ந்து, புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆசிரமத்திற்கு புறப்பாடு நடைபெற்றது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். அக்.23-ம் தேதி மாலை 3 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடு நடைபெறும்.

அன்று மாலை 6 மணிக்கு பழநி அருகேயுள்ள கோதைமங்கலம் சிவன்கோயிலில் அம்பு போட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இன்று (அக்.15) முதல் அக்.23-ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரதம் புறப்பாடு நடைபெறாது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE