எந்த சூழலிலும் சமூக நீதியை விட்டுக் கொடுக்க கூடாது: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: எந்தச் சூழலிலும் சமூக நீதியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாஜகவை தோற்கடிப்பது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளுடைய வரலாற்றுக் கடமை. பாஜக ஆட்சியில் மகளிர் உரிமைமட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. ஒற்றை கட்சி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். அதனால்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை முற்றிலும் தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பெண்களை ஏமாற்ற மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவதைபோல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் எந்த உரிமையும் பெற்றுவிடக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை முதலில் உறுதி செய்தார். இப்போது அந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.

இதர பிறப்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும் பாஜக அரசு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இதனை சுட்டிகாட்டி பேசினால், பெண்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்த பார்ப்பதாக பிரதமர் மோடி சொல்கிறார். சாதி, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவது யார் என்று அனைவருக்கும் தெரியும். இதனை அப்படியேவிட்டால் சமூக நீதியை காவு வாங்கிவிடுவார்கள். எந்த சூழலிலும் சமூக நீதியை விட்டுக்கொடுக்கக்கூடாது.

சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல், அனைவருக்குமான அரசியல் பங்கீடு போன்ற கோட்பாடுகளை கொண்டதாக இண்டியா கூட்டணி அமைந்திருக்கிறது. இதனை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல அனைத்து உரிமைகளும் கிடைக்கும் இந்தியாவை உருவாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: மகளிர் உரிமை என்பது திராவிட இயக்கத்தில் 100 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. குடியரசுத் தலைவர், விளையாட்டு வீராங்கனைகள், அமைச்சர்கள், சாமானிய பெண்கள்என யாருக்கும் பாதுகாப்பு மட்டுமின்றி நியாயம் கிடைக்காத நிலையைத் தான் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. 2016-17 காலகட்டத்தில் 15 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பிருந்த நிலையில், தற்போது 8 சதவீதமாக குறைந்திருக்கிறது. நாங்கள் யாசகம் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். அனைவரும் ஒன்றிணைந்து வரலாற்றைத் திருத்தி எழுதுவோம்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு நாள் இருண்ட நாளாக இருந்தது. முதன்முறையாக இங்கு வந்து எனது தந்தையின் இறந்த உடலை பெற்றுக் கொண்டேன்.

100 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை எழுதினார். சமூக மாற்றத்துக்கான புரட்சி இங்குதான் தோன்றியது. இன்னும் சமத்துவத்தை பெண்கள் பெற முடியாத நிலை உள்ளது. நாம் முழுமையான சமத்துவத்தை பெற இன்னும் உழைக்க வேண்டும்.

வேட்டி, சேலை பரிசளிப்பு: மாநாட்டின் தொடக்கத்தில் பிரபல பின்னணி பாடகிகள் மாலதி மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களுக்கு கருணாநிதியின் சிலை நினைவுப்பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வேஷ்டியையும் பெண் விருந்தினர்களுக்கு சேலைகளையும் கனிமொழி அன்பளிப்பாக வழங்கினார்.

மாநாட்டுக்கு வருகை தந்த ‘இண்டியா' கூட்டணி உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE